நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் முதல் நாளில் இரு அவைகளிலும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நாளை (நவம்பர் 29) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 23-ம் தேதிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொடரின் முதல் நாளிலேயே, கடந்த ஆண்டில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, முதல் நாளில்பாஜக எம்.பி.க்கள் அனைவரும்நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்கவேண்டும் என அனைத்து எம்.பி.க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கும் இதுபோன்ற உத்தரவை அக்கட்சியின் கொறடா பிறப்பித்துள்ளார். மேலும் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும்படி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்தக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சி மசோதா, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்குகளை குறைக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago