இணையவழி வாக்களிப்புக்கு அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை தேவை என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி தலைமையில், சட்ட மற்றும் தனிநபர் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கருத்தை கேட்பது வழக்கம்.
அந்த வகையில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விளக்கம்அளிப்பதற்காக தேர்தல் ஆணையஅதிகாரிகளுக்கு இக்குழு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது. அப்போது தேர்தல் ஆணையஅதிகாரிகள் இணையவழி வாக்களிப்பு தொடர்பாக புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் உதவியுடன் ஆய்வு செய்ததாக தெரிவித்தனர்.
இதுபோன்ற புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும்போது அதற்கு அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையும், ஒத்துழைப்பும் அவசியம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரம் இணையவழியில் வாக்களிப்பது என்பது உலகளவில் சில இடங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்றும், பெரும்பாலான இடங்களில் தொலைதூர வாக்களிப்பு என்பது தபால்வாக்குகளாக மட்டுமே இருந்துள்ளதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணையவழியில் வாக்களிப்பதற்கு சட்டத்தில் திருத்தம், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம், இணையவழி வாக்களிப்புஇயந்திரங்கள் (ஆர்விஎம்), நடைமுறைகள் மற்றும் நிதி தாக்கங்களில் மாற்றம் ஆகியவை தேவை என்றும் அப்போது அதிகாரிகள் நிலைக்குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்தியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago