நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரரான ஸ்ரேயஸ் ஐயர் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து 2-வது நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் விளாசியது.
கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 13, சேதேஷ்வர் புஜாரா 26, ஷுப்மன் கில் 52, அஜிங்க்ய ரஹானே 35 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 75, ஜடேஜா 50 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜடேஜா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டிம் சவுதி பந்தில் போல்டானார்.
இதன் பின்னர் களமிறங்கிய ரித்திமான் சாஹா 3 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய அறிமுக வீரரான ஸ்ரேயஸ் ஐயர் சதம் விளாசினார். 171 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார் ஸ்ரேயஸ் ஐயர். இதன் பின்னர் அக்சர் படேல் 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 38 ரன்களிலும், இஷாந்த் சர்மா டக் அவுட்டிலும் வெளியேற 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.
உமேஷ் யாதவ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து சார்பில் டிசம் சவுதி 5, ஜேமிசன் 3, அஜாஸ் படேல் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 57 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது.
டாம் லேதம், வில் யங் ஜோடி இந்திய பந்துவீச்சை எந்தவித சிரமமும் இன்றி எதிர்கொண்டு விளையாடி ரன்கள் சேர்த்தனர். டாம் லேதம் 50 ரன்களுடனும், வில் யங் 75 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். கைவசம் 10 விக்கெட்கள் இருக்க 216 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது நியூஸிலாந்து அணி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago