லடாக்கின் கல்வான் பள்ளத்தாக் கில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் கே. பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருதையும் கர்னல் சந்தோஷ் பாபவுக்கு ‘மகாவீர் சக்ரா’ விருதையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.
கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் தெலங்கானாவைச் சேர்ந்த ராணுவ கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த கே. பழனி உட்பட 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சீன ராணுவ வீரர்களுடன் தீரத்துடன் சண்டையிட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு ‘மகாவீர் சக்ரா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷி, தாயார் மஞ்சுளா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதேபோல், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கூடுகல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கே.பழனிக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவரது மனைவி வானதி தேவி பெற்றுக் கொண்டார். இதுதவிர, ராணுவ வீரர்கள் நூதுராம் சோரன், நாயக் தீபக் சிங், குர்தேஜ் சிங் ஆகியோருக்கும் ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில், கீர்த்தி சக்ரா விருது ஒருவருக்கும், சவுரிய சக்ரா விருது 7 பேருக்கும், பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் 16 பேருக்கும், உத்தம் யுத் சேவா பதக்கம் 2 பேருக்கும், அதி விசிஷ்ட் சேவாபதக்கம் 25 பேருக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago