கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ள - மணிப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் : மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

குறைவான அளவில் தடுப்பூசி செலுத்திய 3 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவை கூடுதலாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குறைவானஎண்ணிக்கையிலேயே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எனவே அந்த மாநிலங்களில் தடுப்பூசி இயக்கத்தை பிரபலப்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நாம் தற்போது கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் கடைசிக் கட்டத்தில் உள்ளோம். எனவே குறைவான அளவில் தடுப்பூசி செலுத்திய மணிப்பூர், மேகாலயா, புதுச்சேரி, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து கூடுதலாக தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கவேண்டும்.

இதற்குத் தேவையான உத்தரவுகளை அதிகாரிகள், ஊழியர்களுக்கு மாநில சுகாதாரத்துறை வழங்கவேண்டும். மாநிலம் முழுவதும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும். சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

நாடு முழுவதும் முதல் டோஸ் செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 82 சதவீதமாகவும், 2-வது டோஸ் செலுத்தியோர் எண்ணிக்கை 43 சதவீதமாகவும் உள்ளது. இதில் புதுச்சேரி (முதல் டோஸ்-66 சதவீதம், 2-வது டோஸ்-39 சதவீதம்), நாகாலாந்து (முதல் டோஸ்-49 சதவீதம், 2-வது டோஸ்-36 சதவீதம்), மேகாலயா (முதல் டோஸ்-57 சதவீதம், 2-வது டோஸ்-36 சதவீதம்), மணிப்பூர் (முதல் டோஸ்-54 சதவீதம், 2-வது டோஸ்-36 சதவீதம்) மாநிலங்களில் மக்கள் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்