ஹைதராபாத்தை அடுத்த போச்சம்பள்ளி, சிறந்த உலக சுற்றுலா கிராம விருதுக்கு தேர்வாகி உள்ளது.
ஐ,நா.சபையின் ஒரு அங்கமாக விளங்கும் உலக சுற்றுலா அமைப்பு (யுஎன்டபிள்யூடிஓ) ஸ்பெயினின் மேட்ரிட் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக உள்ள உலக சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், கிராம சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த உலக சுற்றுலா கிராம விருதை வழங்குகிறது. இந்த விருதுக்கு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள போச்சம்பள்ளி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருது வரும் டிசம்பர் 2-ம் தேதி மேட்ரிட் நகரில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் பட்டு நகரம்என போச்சம்பள்ளி அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அங்கு நெய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமாகவும் தரத்தில் சிறந்தவையாகவும் உள்ளன. மேலும் பருத்தி துணிகளும் இங்கு உற்பத்தியாகின்றன. இதனால் பட்டுப் புடவை மற்றும் பருத்தி துணி வர்த்தகம் தொடர்பாக ஏராளமானோர் தினமும் அங்கு சென்று வருகின்றனர். இதுதவிர, 28 சதுர கி.மீ. பரப்பளவுள்ள போச்சம்பள்ளி, விவசாய நிலங்கள், மலைகள் என ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதனால் இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான வசதிகளையும் சுற்றுலாத் துறை செய்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை நின்றுவிட்டது. இப்போது கரோனா பரவல் குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், சிறந்த உலக சுற்றுலா கிராமமாக போச்சம்பள்ளி தேர்வாகி இருப்பதால் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago