சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய அறிவிப்பின்படி இனி மூன்றாம் பாலினத்தவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வாய்பு உருவாகியுள்ளது. அதாவது மூன்றாம் பாலினத்தவர் ஒலிம்பிக்ஸில் பங்கு பெறுவதை அந்தக் குழு இனி தடைசெய்யாது. பல்வேறு விளையாட்டுகளுக்கான கூட்டமைப்புகள் தனித்தனியாக இதுதொடர்பாக தீர்மானிக்கலாம். முக்கியமாக மகளிர் பிரிவில் திருநங்கைகள் போட்டியிட்டால் அது அவர்களுக்கு அதிகப்படியான சாதக நிலையைத் தருமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அந்தந்த கூட்டமைப்புக்கு மாற்றப்படுகிறது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் மருத்துவ இயக்குநர் ரிச்சர்ட் பட்ஜெட் (மகளிர்), ‘போட்டிகளில் இனி யார் கலந்து கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்க டெஸ்டோஸ்டிரோன் அளவை அறிய வேண்டும் என்பது கட்டாயமல்ல. எனினும் இந்த அறிவிப்பு ஒரு வழிகாட்டுதல்தான், சட்டம் அல்ல’ என்று கூறியிருக்கிறார்.
தொடக்ககால ஒலிம்பிக்ஸில் ஆண்கள் மட்டுமே பங்கு பெறஅனுமதிக்கப்பட்டனர். பல வருடங்களுக்குப் பிறகுதான் பெண்களுக்கும் அனுமதி கிடைத்தது. பின்னர் சுயபாலின ஈர்ப்புகொண்ட விளையாட்டு வீரர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இப்போது மூன்றாம் பாலினத்தவருக்கான அனுமதிக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது.
ரெனி ரிச்சர்ட்ஸ் டென்னிஸ் வீரராக அறியப்பட்டவர். பின்னர் பெண்ணாக மாறும் சிகிச்சையை மேற்கொண்டு மகளிர் போட்டிகளில் பங்கேற்றார். யுஎஸ் ஓபனில் அவர் பங்கேற்க சென்றபோது 32 மகளிர் போட்டியாளர்களில் 25 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு ரெனி உடல் சோதனைக்கு உள்ளாக வேண்டும் என்று கூறியதால் அதற்கு அவர் மறுத்ததால் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கில் நியூயார்க் உச்ச நீதிமன்றம் ரெனிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. பின்னர் தனது 43-வது வயதில் யுஎஸ் ஓபன் போட்டியில் கலந்துகொண்ட ரெனி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸில் புதிய விதியின்படி திருநங்கைகள் அனுமதிக் கப்பட்டனர். இதன் மூலம் நியூஸிலாந்தின் 43 வயதான லாரர் ஹப்பர்ட் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட முதல் திருநங்கையானார். இதே ஒலிம்பிக்ஸில் பங்குகொண்ட கனடா மகளிர் கால்பந்து அணியின் க்வின் என்ற திருநங்கைதான் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் மூன்றாம் பாலினத்தவர்.
பொதுவாக ஒலிம்பிக்ஸில் மகளிர் பிரிவில் போட்டியிடு பவர்களின் உடலில் டெஸ் டோஸ்டிரோன் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டக்கூடாது என்கிறது சர்வதேச விளையாட்டு விதிகள். இதனால் இதுவரை 70-க்கும் அதிகமான வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
2014-ல் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம் வென்றார் ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டில் போட்டியிடலாம் என அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர், தேர்வு செய்யப்படவில்லை. அவர் உடலில் ஆண்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்ததால் டெஸ்டோஸ்டிரோன் அளவும் அதிகமாக இருப்பதாக தடகள சங்கம் கூறியது. இந்த நிலை கொண்ட பெண்கள் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதை ஒலிம்பிக் விதிகள் தடை செய்தன. டூட்டி சந்த் மீது ஏமாற்றியதாகவோ ஊக்க மருந்தை உட்கொண்டதாகவோ எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டூட்டி சந்த் வழக்கு தொடுத்தார். வழக்கின் தீர்ப்பில் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவு பெண்களின் விளையாட்டுத் திறனை அதிகப்படுத்துகிறது என்பதற்கு போதிய சான்று இல்லை என்று கூறப்பட்டது. ஒரு பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவில் காணப்பட்டால் அது அவருக்கு போட்டியில் அதிக சாதகத்தை தருகிறது என்பதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச தடகளக் குழு நிரூபிக்க வேண்டும் என்றது நீதிமன்றம். (பின்னர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்தார் டூட்டி சந்த்).
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி செளந்தரராஜனுக்கும் அதேபோன்ற நிலை முன்பு ஏற்பட்டிருந்தது. 2006-ம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சாந்தி. பின்னர் பாலின சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது பதக்கங்கள் பறிக்கப்பட்டதுடன் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
தடகளப் பங்கேற்பாளர்கள் ஆண், பெண் என்று இரண்டுபிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளனர். ஆனால் மனிதகுலத்தை இப்படி முழுவதுமாக இரண்டு பிரிவுகளாக மட்டுமே பிரித்துவிட முடியாது. அதற்கான அங்கீகாரம்தான் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் அறிவிப்பு.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago