புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகை கங்கனா ரனாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சுமார் ஓராண்டாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதுதொடர்பாக நடிகர் சோனுசூட் கூறும்போது, “இது ஒரு அற்புதமான செய்தி. விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. அமைதியான போராட்டங்கள் மூலம் நியாயமான கோரிக்கைகளை எழுப்பிய விவசாயிகளுக்கு நன்றி. குருநானக் ஜெயந்தியன்று நீங்கள் (விவசாயிகள்) உங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் திரும்புவீர்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
நடிகையும் அரசியல்வாதியு மான ஊர்மிளா மடோன்கர், "எந்தவொரு விஷயத்திலும் வெற்றி பெறப் பேரார்வமும், கொதிக்கும் ரத்தமும் தேவை. எண்ணங்கள் உறுதியானதாக இருந்தால் அந்த வானமும் தரைக்கு வரும். விவசாய சகோதர சகோதரிகளுக்காக நான்மகிழ்ச்சி அடைகிறேன். தியாகிகளான விவசாயிகளுக்கு வீர வணக்கம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல பாலிவுட் பிரபலங்களான டாப்சி, குல் பனாக், தியா மிர்சா, பிரியங்கா சோப்ரா, ரிச்சா சத்தா உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூகவலைத்தளத்தில், “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது, முற்றிலும்நியாயமற்றது. வருத்தப்படத் தக்கது. நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் பதிலாகச் சாலைகளில் உள்ளவர்கள் சட்டத்தை இயற்றத் தொடங்கினால் இதுவும் ஜிகாதி தேசம்தான். இப்படி நடக்க வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட் டுள்ளார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago