நாடாளுமன்றத்தில் சட்டங்கள் ரத்தாகும் வரை - போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு :

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்காக மத்திய அரசு சார்பில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.

இந்த மசோதா நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும். குடியரசுத் தலைவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு முறைப்படி அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம் 3 வேளாண் சட்டங் களும் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படும்.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், மத்திய அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து நடத்தி வருகின்றன. இதில் முக்கிய சங்கமான பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறும்போது, "நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமாக 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகே எங்களது போராட்டத்தை கைவிடுவோம். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம், இதர விவகாரங்கள் குறித்து விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், "வேளாண் சட்டங்களை ரத்துசெய்யும் முடிவை வரவேற்கிறோம். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உறுதி செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.

வேளாண் அமைச்சர் கருத்து

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார். இதன்மூலம் விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து ஒரு தரப்பு விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை. தற்போது 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ்பெற பிரதமர் முடிவு செய்துள்ளார். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்