ஆடைக்கு மேல் தொட்டாலும் பாலியல் குற்றமே : போக்சோ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

ஆடைக்கு மேல் தொட்டாலும் பாலியல் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமிக்கு, 39 வயது நபர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி புஷ்பா கனெடிவாலா கடந்த ஜனவரி 19-ம் தேதி தீர்ப்பளித்தார். "தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல் ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது. போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தது தவறு" என்று கூறிய நீதிபதி, 39 வயது நபரை விடுதலை செய்தார்.

இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் கடுமையாக கண்டித்தனர். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர அரசு சார்பில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி அமர்வு வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்புவழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:

தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல் தொடுவது பாலியல் குற்றம் இல்லை என்று கூறுவது முட்டாள்தனமானது. சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவே போக்சோசட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தசட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இது மோசமானமுன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

ஒருவர் கையுறை அணிந்து கொண்டு சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டால் அவர் மீது போக்சா சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று கூறுவது எந்த வகையில்நியாயம்? சட்டத்தின் ஓட்டைகளைபயன்படுத்தி யாரும் தப்பிக்கக்கூடாது.

போக்சோ சட்டத்தில் தொடுதல்குறித்து வரையறை இல்லை. எனினும் ஒருவர் பாலியல் நோக்கத்தோடு தொட்டாலே குற்றம்தான். தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல் ஆடைக்கு மேல் தொட்டாலும் குற்றமே. போக்சோ சட்டம் குறித்து நீதிமன்றங்கள், தேவையற்ற அர்த்தங்களை கற்பிக்கக்கூடாது.

குற்றவியல் வழக்கில் முதல்முறையாக அட்டர்னி ஜெனரல் மேல்முறையீடு செய்துள்ளார். இதை வரவேற்கிறோம். மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்