உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டு வரும் மெய்நிகர் கரன்சியான கிரிப்டோ கரன்சியை (பிட்காயின்) இந்தியாவில் அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நிதி பரிவர்த்தனைக்கு இதை அனுமதிக்காமல் தங்கம் போல வாங்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிப்டோ கரன்சியை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:
பணப் பரிவர்த்தனைக்கு ஈடாக கிரிப்டோ கரன்சியை அனுமதிக்க முடியாது. அவ்வாறு நிதி பரிவர்த்தனைக்கு அனுமதித்தால் அது அந்நியச் செலாவணி மோசடிகளுக்கு வழிவகுக்கும். இது பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிக்க வழியேற்படுத்தும்.
அதேநேரம், கிரிப்டோ கரன்சியை பரிவர்த்தனைக்கு முற்றிலும் தடை விதிப்பதைவிட, தங்கம், பங்கு முதலீடு மற்றும் கடன் பத்திர முதலீடுகளைப் போல கிரிப்டோ கரன்சியில் முதலீடு மேற்கொள்ள அனுமதிக்கலாம்.
மேலும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் பொறுப்பு பங்கு பரிவர்த்தனை மையத்திடம் (செபி) ஒப்படைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
கிரிப்டோ கரன்சியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. குறிப்பாக, குறைந்தபட்சம் கிரிப்டோ கரன்சியை சொத்தாக அனுமதிக்க வேண்டும் என்றும் முழுமையாக அதற்கு தடை விதிக்கக் கூடாது என்றும் கோரி இருந்தன.
கிரிப்டோ கரன்சி தொடர்பாக இந்திய அரசு இதுவரையில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2018-ம் ஆண்டு கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆனால் அந்தத் தடையை 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீக்கியது. இதனால் இது தொடர்பாக இறுதியான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது.
கடந்த காலங்களில் கிரிப்டோ வர்த்தகம் மீது ஆர்பிஐ அதிக ஆர்வம் காட்டவில்லை.இதை ஊக்குவிப்பது பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றுகுறிப்பிட்டதோடு நிதி ஸ்திரத்தன்மையை வெகுவாக குலைத்துவிடும் என்று ஆர்பிஐ ஆளுநர்சக்திகாந்ததாஸ் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே கிரிப்டோ வர்த்தகம் தொடர்பாக புதிய மசோதா அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா நவம்பர் 29-ம் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை மே 2021 நிலவரப்படி 660 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடற்ற கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைஅனுமதித்தால் அது குடும்பங்களின் சேமிப்பை நிலைகுலையச் செய்யும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago