தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) என்பது ஒரு காலத்தில் அரசுக்கு எதிரான கணக்கு தணிக்கையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அத்தகைய மனப்போக்கு மாறிவிட்டது. தணிக்கை என்பது மதிப்பு கூட்டு நடவடிக்கையில் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) அலுவலகம் நேற்று ஏற்பாடுசெய்திருந்த முதலாவது தணிக்கை தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மாறிவரும் சூழலுக்கேற்ப நவீனமுறைகளை சிஏஜி கையாண்டு வருகிறது. மேம்பட்ட பகுப்பாய்வு முறைகள், பரந்துபட்ட புள்ளிவிவர தொகுப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலும் தணிக்கை முறை மேற்கொள்ளப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தணிக்கை துறையானது தனது பாரம்பரியம் மாறாமல் அதேசமயம் மிகவும் வலுவான தடத்தைப் பதித்து புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி வளர்ந்து வருகிறது.
21-ம் நூற்றாண்டில் தகவல்தொகுப்பு மிகவும் முக்கியமானது. வரும் காலத்திலும் இதுவே பிரதானமாக இருக்கும். நமது வரலாறும் தகவல்கள் அடிப்படையில்தான் அறிந்துகொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் தகவல்கள்தான் வரலாற்றை ஆளும். மத்திய அரசின் செயல்பாடுகளை தணிக்கை செய்யும் சிஏஜியின் குறிப்புகள் எதிர்காலத்தில் தகவலாகவும் வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.
சிஏஜி நாட்டின் கணக்குகளை மட்டும் தணிக்கை செய்வதில்லை. உற்பத்தி அதிகரிப்புக்கும், சிறப்பாக செயல்படவும் மதிப்பு கூட்டு நடவடிக்கையாக உள்ளது. இதனால் தணிக்கை தினத்தில் அது சார்ந்ததிட்டங்களை விவாதித்து அதைமேம்படுத்துவது மற்றும் அதை சிறப்பாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
வங்கித் துறையில் முன்பு வெளிப்படையான செயல்பாடு இல்லை. பல்வேறு முறையற்ற வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதன் வெளிப்பாடுதான் வங்கிகளில் தொடர்ந்து வாராக் கடன்அதிகரித்து வந்தது. முந்தையஅரசின் தவறான அணுகுமுறையால்தான் வங்கிகளின் வாராக்கடன் தொகை மறைக்கப்பட்டது. வங்கிகளின் பிரச்சினையைத் தெரிந்து கொண்டு அதற்குரிய தீர்வுகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம்.
சுகாதாரம், வங்கித்துறை மற்றும் தனியார் துறைகளின் வளர்ச்சிக்கு அரசின் அணுகுமுறையுடன் சிஏஜி வகுத்தளித்த பல்வேறு கருத்துகளும் முக்கியக் காரணம். சிஏஜியின் அறிக்கைகள், கருத்துகள் அடுத்துவரும் அரசுகளுக்கு மிகவும் பலனளிப்பதாக அமையும். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago