சீரமைக்கப்பட்ட ஆதி சங்கரரின் நினைவிடம் மற்றும் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ஆதி சங்கரர் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களுக்கான யாத்திரை ஆகும். இவை அனைத்தும் உத்தராகண்ட் மாநிலம் கர்வால் பகுதியில் அமைந்துள்ள இந்துக்களுக்கான புனித தலங்கள் ஆகும். சார்தாம் யாத்திரையில் மிக முக்கியமானதாக அமைந்துள்ள கேதார்நாத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
அப்போது அங்கு மறுசீரமைக்கப்பட்ட ஆதிசங்கரரின் நினைவிடத்தை தொடங்கி வைத்ததுடன் 12 அடி உயர ஆதி சங்கரரின் உருவச்சிலையையும் திறந்துவைத்தார். பின்னர் கேதார்நாத் ஆலயத்தில் அவர் ஆரத்தி எடுத்து வழிபட்டார். பின்னர் அவர் அங்கு நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்புப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கேதார்நாத் ஆலயத்துக்கு வருகை தருவது விவரிக்க முடியாத மகிழ்ச்சி அளிக்கிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று நவ்ஷேராவில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினேன். 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை ராணுவ வீரர்களிடம் எடுத்து கூறினேன். கோவர்த்தன பூஜை தினமான இன்று பாபா கேதாரின் தெய்வீகப் பார்வையில் நான் நிற்கிறேன். சில அனுபவங்கள் மிகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதுபற்றி வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இதனை பாபா கேதார் நாத் ஆலயத்தில் உணர்ந்தேன்.
2013-ம் ஆண்டில் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் கற்பனை செய்ய முடியாதவை. இங்கே வந்த மக்கள் நமது கேதார் ஆலயம் மீண்டும் எழுந்து நிற்குமா என்று நினைத்தார்கள், ஆனால் இது முன் எப்போதையும் விட கூடுதல் பெருமிதத்தோடு நிற்கும் என்று எனது உள்மனம் கூறியது. பகவான் கேதாரின் கருணையாலும் ஆதி சங்கரரின் ஆசியாலும், பூஜ் நிலநடுக்கத்துக்குப் பின் நிர்வகிக்கப்பட்ட அனுபவத்தாலும் இக்கட்டான அந்தத் தருணத்தில் என்னால் உதவி செய்ய முடிந்தது.
இந்தக் கோயிலின் மேம்பாட்டு பணிகளை அயராது தொடர்ந்த தொழிலாளர்கள், பூசாரிகள், பூசாரிகளின் குடும்பங்கள், அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி. சங்கர் என்பதற்கு நன்மை செய்யும் ஒருவர் என பெயர். இந்த இலக்கணம் ஆதி சங்கரால் நேரடியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை மிகவும் சிறப்புடையது, சாமான்ய மக்களின் நலனுக்கு வாழ்க்கையை அவர் அர்ப் பணித்துக்கொண்டிருந்தார். ஆன்மீகமும், சமயமும் ஒரே மாதிரியான, காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்தத் தருணத்தில், இந்தியத் தத்துவம் மனிதகுல நலன் பற்றி பேசுகிறது. வாழ்க்கையை ஒட்டுமொத்த கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்த உண்மையின் மீது சமூகம் விழிப்புணர்வு பெற ஆதிசங்கராச்சாரியார் பணி செய்தார்.
அயோத்தியில் ராமரின் மாபெரும் ஆலயம் உருவாகிவருகிறது, அயோத்யாதனது புகழை மீண்டும் பெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அயோத்யாவில் தீபோத்சவம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. இதிலிருந்து தொன்மையான இந்தியக் கலாச்சாரம் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். இந்தியாவின் இந்த கலாச்சாரத்தை உலகமே வியந்து பார்த்தது.
இன்றைய இந்தியா அதன் பாரம்பரியத்தில் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்தியாவின் புகழ்மிக்க விடுதலைப் போராட்டம் தொடர்பான இடங்களுக்கும், புனித யாத்திரைக்கான பக்திசார்ந்த இடங்களுக்கும் பயணம் செய்யவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் உணர்வை அறிந்துகொள்ள வேண்டும்.
புவியியல் ரீதியான சிரமங்களை விஞ்சி, உத்தராகண்டும் அதன் மக்களும் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி இலக்கை இன்று சாதித்துள்ளனர். இதுதான் உத்தராகண்டின் பலமும் சக்தியும் ஆகும். உத்தராகண்ட் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது.
தற்போது நாடு தனக்கென பெரிய இலக்குகளை நிர்ணயித்து செயல்படுகிறது. கடினமான காலக்கெடுவை அமைத்துள்ளது. இது எப்படி இவ்வளவு குறுகிய காலத்திற்குள் நடக்கும்? அது நடக்கும் அல்லது நடக்காது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் கால வரம்புகளால் மிரட்டப்படுவதை இந்தியா இனி ஏற்காது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
12 அடி பிரம்மாண்ட சிலை
கேதார்நாத் ஆலய வளாகத்தில் ஆதி சங்கரரின் சிலை 12 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்ச சிலையின் மொத்த எடை 35 டன். இதற்கான பணிகள் 2019-ல் தொடங்கின. சிலை திறப்புவிழா இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்துள்ள தலங்கள், ஆதி சங்கரர் அமைத்த 4 மடங்களிலும் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago