கேரள மாநிலம் வயநாடு அருகிலுள்ள கனியம்பெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் கடந்த மாதம் 30-ம் தேதி அமேசான் இணையதளத்தில் தனது பாஸ்போர்ட்டுக்கு கவர் (மேல் உறை) வேண்டுமென ஆர்டர் செய்தார்.
2 நாட்கள் கழித்து அமேசான் நிறுவனத்தார் அவருக்கு பார்சலை அனுப்பினர். அதில் பாஸ்போர்ட் கவருக்குப் பதிலாக நிஜ பாஸ்போர்ட் இருப்பதைக் கண்டு மிதுன் பாபு அதிசயித்தார்.
இதுகுறித்து மிதுன்பாபு கூறும்போது, “பார்சலை பிரித்ததும் அதில் பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டு வியந்தேன். முதலில் நான் அது டம்மி பாஸ்போர்ட் என்று நினைத்தேன். ஆனால் அதில் நிஜ பாஸ்போர்ட் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். திருச்சூரைச் சேர்ந்த ஒருவரின் பாஸ்போர்ட் அது என்பது பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து அமேசான் நிறுவன நுகர்வோர் நல எண்ணை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தேன். தகவலைப் பெற்ற அவர்கள் இனி எதிர்காலத்தில் கவனமுடன் செயல்படுகிறோம் என்று தெரிவித்தனர். இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்ற ரீதியில் அவர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து அந்த நிஜ பாஸ்போர்ட்டின் உரிமையாளர் முகமது சலியைத் தொடர்பு கொண்டு பேசினேன்.
அப்போது அவரும் பாஸ்போர்ட் கவரை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். அது சரியில்லை என்று கூறி அமேசானுக்கு அவர் திருப்பி அனுப்பியுள்ளார். அப்போது தவறுதலாக கவருக்குப் பதிலாக நிஜ பாஸ்போர்ட்டை அனுப்பி வைத்து விட்டார் முகமது சலி. அந்த பாஸ்போர்ட்டைத்தான் அவர்கள் எனக்கு தவறுதலாக அனுப்பிய விவரம் தெரிய வந்தது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago