இந்தியாவில் வரும் 2070-ம் ஆண்டுக்குள் பசுமைக் குடில் வாயுக்கள் மாசு பூஜ்ஜியமாகும் என்று ஐ.நா. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்றமாநாடு கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
பருவநிலை மாற்றத்தால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. பருவமழை பொய்ப்பது, அதிக மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் புயல்களால் பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப குடிநீர் ஆதாரம், வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்டமைப்பது அவசியமாகிறது. இதன்படி இந்தியாவில் குழாய் குடிநீர் திட்டம், தூய்மை இந்தியாதிட்டம், ஏழைகளுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் இந்தியமக்களின் வாழ்க்கைதரம் உயர்ந்துள்ளது. இயற்கையோடு இணைந்து வாழும் அறிவை மக்கள் பெற்றுள்ளனர்.
5 வாக்குறுதிகள்
உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். எனினும் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 5 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கிறது. பாரிஸ் உடன்பாட்டை இந்தியா உறுதியுடன் பின்பற்றி வருகிறது. இதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா சார்பில் 5 வாக்குறுதிகளை அளிக்கிறேன்.வரும் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் அளவுக்கு புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின் உற்பத்தி திறன் பெருக்கப்படும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறப்படும். இப்போது முதல் வரும் 2030-ம் ஆண்டுக்குள் கரியமிய வாயு வெளியேற்றம் 100 கோடி டன் அளவுக்கு குறைக்கப்படும்.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தில் கரியமில வாயு பங்களிப்பு 45%அளவுக்கு குறைக்கப்படும். இந்தியாவில் வரும் 2070-ம் ஆண்டுக்குள் பசுமைக் குடில் வாயு மாசு பூஜ்ஜியமாகும்.
கிளாஸ்கோ மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளால் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வளமான எதிர்காலம் உறுதி செய்யப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மோடி இஸ்ரேல் பிரதமர் சந்திப்பு
இந்த மாநாட்டுக்கு நடுவே இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப் போது, "நீங்கள் எங்கள் நாட்டில் பிரபலமாக உள்ளீர்கள். எனவே, எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் கட்சியில் சேர்ந்து விடுங்கள்" என மோடியிடம் பென்னட் தெரி வித்தார். இதையடுத்து, மோடி வாய்விட்டு சிரித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago