ஒற்றுமையாக இருந்தால் முன்னேறலாம் : சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி கருத்து

By செய்திப்பிரிவு

ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:

ஒரே இந்தியா, உன்னத இந்தியாவுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் வல்லபபாய் படேல் அர்ப்பணித்தார். நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் அவர் குடியிருக்கிறார். அவரது நினைவாக நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.

சிந்தனைகள், கொள்கைகள், நாகரிகம், கலாச்சாரத்தின் பிறப் பிடமாக நமது நாடு திகழ்கிறது. இந்தியா என்ற படகில் நாம் பயணம் செய்கிறோம். இந்த படகு குறித்து 130 கோடி இந்தியர்களும் அக்கறை கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். லட்சியங்களை எட்டிப் பிடிக்க முடியும்.

வலுவான, ஒன்றிணைந்த, வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக சர்தார் படேல் விரும்பினார். நாட்டின் நலனுக்கு அவர் முதலிடம் அளித்தார். அவரது வழிகாட்டுதலின்படி உள்நாடு, வெளிநாட்டில் இருந்து எழும் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்ளும் திறனை இந்தியா இப்போது பெற்றுள்ளது.

நாம் எதைச் செய்தாலும் நாட்டின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். கடைக்குச் சென்றால் உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும். இதன் மூலம் சுயசார்பு இந்தியா திட்டம் வலுவடையும். இவ்வாறு அவர் பேசினார்.

தேசப்பற்று கோயில்

குஜராத்தின் கெவதியாவில் அமைந்துள்ள ஒற்றுமை சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சுதந்திரத்தின்போது இந்தி யாவை பல்வேறு பகுதிகளாக பிரிக்க ஆங்கிலேயர்கள் சூழ்ச்சிசெய்தனர். அவர்களின் சூழ்ச்சியைசர்தார் வல்பபாய் படேல் முறியடித்தார். அவரது துணிச்சலான நடவடிக்கைகளால் இந்திய பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இதன் காரணமாகவே அவரது பிறந்த நாளை ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம்.

ஒற்றுமை சிலை சுற்றுலா தலம் கிடையாது. இது தேசப் பற்று கோயில். வானளாவிய அளவில் உயர்ந்து நிற்கும் படேல் சிலையின் மூலம் உலகத்துக்கு முக்கிய செய்தி எடுத்துரைக்கப்படுகிறது. இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை யாராலும் சீர்குலைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்