கோவாவில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் கோவாவில் பல்வேறு தரப்பினரையும் கட்சியில் இணைக்கும் வகையில் 3 நாட்கள் பயணமாக மம்தா பானர்ஜி அங்கு சென்றுள்ளார்.
பனாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முன்னிலையில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகை நஃபிஷா அலி ஆகியோர் திரிணமூல் கட்சியில் சேர்ந்தனர். மூத்த நடிகையான நஃபிசா அலி கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெற்கு கொல்கத்தா தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மம்தா பேசிய தாவது: திரிணமூல் காங்கிரஸ் ஒருபோதும் மக்களை மதத்தால் பிரிக்காது. ஏனென்றால் எங்கள் கட்சியின் பெயரிலேயே (TMC) கோயில் (Temple), மசூதி (Mosque), தேவாலயம் (Church) இருக்கிறது. கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பழிவாங்குதல் எண்ணத்தோடு பணியாற்றாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவோம்.
எனக்கு இந்த தேசத்தைப் பற்றி நன்கு தெரியும். எங்களை நம்பினால், எங்கள் கட்சி முழுமையாக உங்களுக்கு ஆதரவு அளிக்கும். கோவாவை டெல்லியில் இருந்தவாறே ஆள விடமாட்டோம். கோவாவை வலுவாகவும், தன்னிறைவு பெறவும், மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.
கடந்த முறை கோவா தேர்தலில், பாஜகவை ஆட்சி அமைக்க காங்கிரஸ் அனுமதித்தது. அவர்கள் அதையே மீண்டும் செய்யலாம். அவர்களை எப்படி நம்புவது? கோவாவுக்காக தனது ரத்தத் தைக் கொடுக்க திரிணமூல் காங்கிரஸ் தயாராக உள்ளது, ஆனால் பாஜக வுடன் சமரசம் செய்து கொள்ளாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago