என் தந்தை தரப்பில் என்சிபி அதிகாரிகளிடம் ரூ.25 கோடி பேரம் பேசவில்லை என்று ஆர்யன் கான் தெரிவித்தார்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 3-ம் தேதி போதைப்பொருள் தடுப்புபிரிவினர் (என்சிபி) சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக, நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இதனிடையே, என்சிபி தலைமை அதிகாரி சமீர், வான்கடே ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசியதாக இந்தவழக்கில் அரசின் பொது சாட்சியாகசேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் புகார் தெரிவித்தார். ஆனால் இதை சமீர் வான்கடே மறுத்துள்ளார்.
இந்நிலையில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆர்யன் கான் தரப்பில், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்.
அப்போது ஆர்யன் கான் தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: மும்பையிலிருந்து கிளம்பிய சொகுசு கப்பலில் நான் சென்றேன். ஆனால் நான் போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தவில்லை. மேலும், போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் எனது தந்தை தரப்பில் ரூ.25 கோடி பேரம் பேசியதாகக் கூறப்படுவது தவறு. இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை.
சமீர் வான்கடே குறித்து சமூகவலைதளங்களில் வந்த விஷயங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் சாட்சிகள் பிரபாகர் செயில், கோசவி ஆகியோருக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. நான் எந்த சாட்சியையும் கலைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளையும் (இன்று) நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
மாலிக் குற்றச்சாட்டு
இந்நிலையில் என்சிபி அதிகாரி ஒருவர் சமீர் வான்கடேவுக்கு எதிராக எழுதிய ஒரு கடிதத்தை மகாராஷ்டிரா அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எனக்கு இக்கடிதத்தை பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் அனுப்பியிருக்கிறார். அதில் சமீர் வான்கடேவும், அதிகாரிகளும் சேர்ந்து ஏராளமானோர் மீது போலிவழக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது போலியான வழக்காகும். சமீர் வான்கடேவுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள்தான் இந்த போதைப்பொருள்களை வைத்துள்ளனர். இக்கடிதத்தை என்சிபி டிஜிபி-க்கு அனுப்பி வைப்பேன்” என்றார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago