ம.பி. அமைச்சரின் எதிர்ப்பு காரணமாக - 'கர்வா சவுத்' விளம்பரத்தை திரும்பப் பெற்றது டாபர் நிறுவனம் :

By செய்திப்பிரிவு

‘கர்வா சவுத்’ பண்டிகை தொடர்பான டாபர் நிறுவன விளம்பரத்துக்கு மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

‘கர்வா சவுத்’ பண்டிகையையொட்டி, வட மாநிலங்களில் திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வேண்டி விரதம் இருப்பார்கள்.

முடிவில், வட்டவடிவ தட்டை முகத்துக்கு நேர் வைத்து அதன் வழியே கணவனைப் பார்ப்பார்கள். இதை மையமாக வைத்து ‘ஃபெம்’என்ற அழகு சாதனப் பொருளுக்குடாபர் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. ‘கர்வா சவுத்’ பண்டிகையை இரு தன்பாலின உறவுப் பெண்கள் கொண்டாடுவதுபோல் அந்த விளம்பரம் இருந்தது. இது இந்து மக்களை அவமதிக்கிறது என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்தார்.

“இன்று லெஸ்பியன்கள் ‘கர்வாசவுத்’ பண்டிகையை கொண்டாடுவது போல் விளம்பரம் வெளியிடுவார்கள். நாளை இரு ஆண்கள் திருமணம் செய்வதுபோல் காட்டுவார்கள்” என்று கருத்துத் தெரிவித்த மிஸ்ரா, அந்த விளம்பரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கஅம்மாநில டிஜிபியைக் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து டாபர் நிறுவனம் மன்னிப்புக் கடிதம் வெளியிட்டு அந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஆடை விற்பனை நிறுவனமான ஃபேப் இந்தியா, அதன் பண்டிகைக்கால விற்பனைக்கு உருது மொழியில் ‘ஐஷ்ன இ ரிவாஸ்’ என்று விளம்பரம் வெளியிட்டது. பாரம்பரியத்தின் கொண்டாட்டம் என்று அதற்கு அர்த்தம். “இந்து மதப் பண்டிகையைக் கொண்டாட உருது மொழியில் அழைப்பா?” என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்