ரூ.3 கோடி வருமான வரியை செலுத்தவேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பகல்பூர் பகுதியில் உள்ள அமர் காலனியில் வசித்து வருகிறார் பிரதாப் சிங். இவர் ரிக்ஷா வண்டியை இழுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ.3,47,54,896-யை வருமான வரியாகச் செலுத்துமாறு கூறப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளேன். வங்கியிலிருந்து பான் அட்டை கேட்டதால், கடந்த மார்ச் மாதம் தான் பான் அட்டைக்கு விண்ணப்பித்தேன். பிறகு, உண்மையான பான் அட்டைக்குப் பதிலாக வண்ண நிற நகல்தான் எனக்கு கிடைத்தது.
எனக்கு படிப்பறிவு இல்லாததால், இது நகல் என்பது தெரியாமல் போய்விட்டது.
இந்நிலையில் அக்டோபர் 19-ம் தேதி எனக்கு வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தது.அதில் வரியாக ரூ.3,47,54,896 செலுத்துமாறு கூறியுள்ளனர். நான் எந்த வணிகச் செயலிலும் ஈடுபட்டதில்லை. நான் ஒரு மோசடியாளர் என்று கூறி, வருமான வரித்துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும்.
நான் தினந்தோறும் ரிக்ஷா இழுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஒரு நாளைக்கு நான் சம்பாதிக்கும் பணம் சாப்பாட்டுச் செலவுக்கே சரியாகிவிடுகிறது. இந்நிலையில் ரூ.3 கோடிக்கும் மேல் வருமான வரி செலுத்துமாறு எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், இவரது பான் அட்டையைப் பயன்படுத்திய யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண் பெற்று வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர்கள் 2018-19-ம் நிதியாண்டில் ரூ.43,44,36,201 அளவுக்கு வணிகம் செய்திருப்பதகாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ரிக்ஷா ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடிக்கும் மேல் வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago