ஆன்லைனில் ஐபோன் வாங்க பணம் செலுத்தியவருக்கு சோப்பும், 5 ரூபாய் நாணயமும் அனுப்பி வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் அலுவா பகுதியை சேர்ந்தவர் நூருல் அமீன். இவர் அண்மையில் பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் ஐபோன் 12 வாங்க ரூ.70,900 செலுத்தினார். கடந்த 15-ம் தேதி அவரது வீட்டுக்கு பார்சல் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது ஐபோனுக்கு பதிலாக சோப்பும், 5 ரூபாய் நாணயமும் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தில் நூருல் அமீன் புகார் செய்தார். அதோடு உள்ளூர் காவல் நிலையத்திலும் புகாரை பதிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஹைதராபாத்தில் இருந்து ஐபோன் 12 அனுப்பப்பட்டுள்ளது. வழக்காக 2 நாட்களில் பார்சல் வந்து சேரும். ஆனால் இந்த முறை 3 நாட்கள் ஆனது. வரும் வழியில் சேலத்தில் ஒருநாள் முழுவதும் பார்சல் இருந்துள்ளது. பார்சலை பார்த்தபோதே சந்தேகம் எழுந்தது. ஆன்லைன் வர்த்தக நிறுவன ஊழியருக்கு முன்பாக பார்சலை பிரித்தேன். அதில் சோப்பும் 5 ரூபாய் நாணயமும் இருந்தது. ஆதாரத்துக்காக செல்போனில் வீடியோ எடுத்து கொண்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கேரள போலீஸார் கூறும்போது, "நூருல் அமீனுக்கு அனுப்பப்பட்ட ஐபோன் 12 செல்போனை, ஜார்க்கண்டை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் நூருல் அமீனுக்கு பணத்தை திருப்பி அளித்துவிட்டது. எனினும் அவருக்கு சோப்பை அனுப்பியது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொருட்களை பெற்றுக் கொள்ளும்போது விநியோக ஊழியர்களின் முன்னிலையில் பார்சலை பிரித்து வீடியோ எடுத்து கொள்வது நல்லது என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago