சூடானில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. பிரதமர் அப்தல்லா ஹம்டோக் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வட ஆப்பிரிக்கா நாடான சூடானில் அதிபராக இருந்த உமர் அல் பஷீர், கடந்த 2019 -ம் ஆண்டு பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் பதவி விலகினார். இதனையடுத்து பொது மக்கள் மற்றும் ராணுவம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து, அப்தல்லா ஹம்டோக் பிரதமராக பதவியேற்றார்.
இதனிடையே, ராணுவமே ஆட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் நாடு மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான அரசியல் நெருக்கடியில் இருப்பதாக பிரதமர் அப்தல்லா ஹம்டோக் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். ராணுவத்தில் உள்ள முன்னாள் பிரதமர் அல் பஷீரின் ஆதரவாளர்கள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சூடானில் நேற்று ராணுவப் புரட்சி ஏற்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் பேசிய ராணுவ தளபதி அப்தெல் பட்டாஹ் புர்ஹான், அரசியல் குழப்பம் ஏற்பட்டதால் ராணுவம் அரசு நிர்வாகத்தில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பிரதமர் ஹம்டோக் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியான அரசு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அறிந்த மக்கள் தலைநகர் கர்டோம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தியும் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சூடானில் பதற்றம் நிலவுகிறது. சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி இருப்பதற்கு ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago