நாட்டின் பொருளாதாரம் எந்த கடுமையான சூழலிலிருந்தும் வேகமாய் மீண்டு வர நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தணிக்கை அவசியம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தேசிய தணிக்கை அதிகாரிகள் மற்றும் கணக்காளர்கள் அகாடமி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தணிக்கை அவசியம். ஏனெனில் தணிக்கை அறிக்கைகளின் நம்பகத்தன்மையில் குடிமக்களின் நம்பிக்கை அடங்கியுள்ளது. மேலும் தரமான, நேர்மையான தணிக்கை அறிக்கைகள் நாட்டின் பொது செலவினங்கள் குறித்த முடிவுகளைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தணிக்கைகளின் தரம் மற்றும் ஆழத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்துடன் கலந்து ஆலோசிப்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் தணிக்கை தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். வணிக வங்கிகளுக்கான தணிக்கை முறையை ரிஸ்க் அடிப்படையில் செயல்படுத்தும் முயற்சிகள் நடப்பாண்டு ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நிதித் துறையின் பொருளாதார நிலையை மேம்படுத்த வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் தொடர்ந்து ரிசர்வ் வங்கி வலியுறுத்திவருகிறது.
உலகமயமாக்கல் மற்றும் நிதித் துறையில் உருவாகும் புதிய சவால்கள் ஆகியவற்றைக் கடந்து நிலையான துடிப்பான நிதித் துறையை உருவாக்க தரமான தணிக்கை முக்கியம். அதற்கேற்ப பட்டய கணக்காளர்கள் சமூகம் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago