பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால் - இந்திய அணிக்கு உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை : கேப்டன் விராட் கோலி கருத்து

By செய்திப்பிரிவு

ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால் எனக்கும், இந்திய அணிக்கும் இந்த உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் நேற்றுமுன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

152 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி வி்க்கெட் இழப்பின்றி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக இந்திய அணியை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “ பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டி மிகச்சிறந்தது என உங்களுக்குத் தெரியும். வெளியிலிருந்து யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் தரலாம். என்னுடைய விருப்பமெல்லாம் களத்துக்கு வந்து, விளையாடிப் பாருங்கள் என்ன அழுத்தம் இருக்கிறது எனத் தெரியும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது, குறிப்பாக பாகிஸ்தான் அணியை எளிதாக கருத முடியாது. இன்றுள்ள சூழலில் அந்த அணி உலகில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை கொண்டது. இந்த ஆட்டத்துக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.

இந்த ஒரு போட்டியில் கிடைத்த தோல்வியால் இந்த உலகமே எனக்கும், இந்திய அணிக்கும் முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. வெற்றிக்குத் தகுதியானவர்கள் பாகிஸ்தான் அணியினர், எங்களைவிட அவர்கள் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு தொடக்கத்திலேயே 3 விக்கெட்டை வீழ்த்தினர். 20 ரன்களுக்கு நாங்கள் 3 விக்கெட்டை இழந்தது சரியான தொடக்கம் அல்ல. நாங்கள் பந்துவீசும்போது விரைவாக விக்கெட் வீழ்த்த திட்டமிட்டோம், ஆனால் மட்டை வீச்சால் அவர்கள் எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை. இந்த ஆட்டம் போட்டித் தொடரின் முதல் ஆட்டமேத் தவிர கடைசி ஆட்டம் கிடையாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்