தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக்கான - ஒருங்கிணைப்பு பணியில் வெளியுறவுத் துறையின் சென்னை கிளை : இயக்குநர் எம்.வெங்கடாச்சலம் ஐஎப்எஸ் பேட்டி

By ஆர்.ஷபிமுன்னா

தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக்கான ஒருங்கிணைப்பு பணியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிளைச் செயலகம் கடந்த 2007 முதல் சென்னையில் செயல்படுகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து அதன் இயக்குநரான முனைவர் எம்.வெங்கடாச்சலம், டெல்லி வந்தபோது பேட்டி அளித்தார். சென்னையிலுள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் மத்திய அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பிலும் இவர் உள்ளார். நமது நாளேட்டின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் வருமாறு:

மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு மாநிலங்களில் கிளைகள் என்பதே புதிய தகவலாக உள்ளதே?

இந்தியாவில் மும்பை, குவாஹாட்டி, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் இந்த கிளைச் செயலகங்கள் உள்ளன. கடந்த 2007-ல் சென்னை கிளை தொடங்கப்பட்டது. இக்கிளைக்கான முக்கியப் பொறுப்பாக தமிழகத்துடன், புதுச்சேரியும் அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் சேவை உண்டு. இக்கிளை, வெளிநாடுவாழ் இந்தியர்களின் பொதுநலம், வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, தொழில் வளர்ச்சி ஆகிய 4 பணிகளை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நான்கு தளங்களிலும் தமிழக அரசுடனான ஒருங்கிணைப்பு பணியை இக்கிளை முக்கியமாகச் செய்கிறது.

தென்னிந்தியாவில் இக்கிளை சென்னையில் தொடங்கப்பட வேண்டிய அவசியம்?

சென்னையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளின் துணைத் தூதரகங்கள் உள்ளன. இவர்களுக்கானப் பல பணிகளும் நமது வெளியுறவு அமைச்சகத்தால் செய்யப்பட வேண்டும், எனவே அவற்றுக்கும் நமது கிளை ஒருங்கிணைப்பாக செயல்படுகிறது. மேலும் உலகின் 53 நாடுகள் தங்களது தூதரகப் பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை கவுரவ ஆலோசகர்களாக நியமித்துள்ளன. இவர்களுக்கும் சென்னை கிளையின் பணி அவசியமாகிறது.

சென்னை கிளையால் தமிழர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

‘கான்சுலர் சர்வீஸ்’ எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான சேவை டெல்லியில் மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது இந்த சேவை இக்கிளையின் மூலம் சென்னையிலேயே கிடைக்கிறது. குறிப்பாக, வெளிநாடுவாழ் மக்களின் பிறப்பு, இறப்பு சான்றிதழை சரிபார்த்து உறுதி செய்யும் சேவை தமிழர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. தமிழகம் வரும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், வர்த்தகக் குழுக்கள் போன்றோர் முன்னதாக தங்கள் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகுவர். இந்தியாவில் அவர்களுக்கான ஏற்பாடுகளை நமது வெளியுறவுத் துறையிடம் அங்குள்ள இந்தியத் தூதரகம் கோரும். பின்னர் அவர்களுக்கான உகந்த ஏற்பாடுகளை மாநில அரசின் ஒருங்கிணைப்பும் பெற்று எங்கள் சென்னை கிளை செய்யும். இவ்வாறு வெளிநாடுகள், அவற்றின் வர்த்தக மையங்கள், அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் தமிழக அரசுக்குமான ஒருங்கிணைப்பு பணி எங்கள் கிளைக்கானது. இதனால் தமிழகம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கும் அதிகப் பலன்கள் கிடைத்து வருகின்றன.

தமிழக மாணவர்களின் வெளிநாட்டுக் கல்விக்கான பணியில் இந்தக் கிளையின் பங்கு என்ன?

வெளிநாடுகளில் கல்விக்காக செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்காக செல்வோரின் சான்றிதழை சரிபார்த்து அத்தாட்சி அளிக்கும் பணியை இக்கிளை செய்கிறது. ஒருவர் வெளிநாட்டு விசா பெறுவதிலான பிரச்சினையில் மத்திய அரசு எக்காரணம் கொண்டும் தலையிடாது. ஏனென்றால் விசா வழங்குவது சம்பந்தப்பட்ட நாட்டின் தனிப்பட்ட உரிமை. கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு சென்றபின் அங்குள்ள இந்தியத் தூதரகங்களின் இணையதளங்களில் தங்கள் முழு விவரத்தை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் madad.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவுசெய்யலாம். அப்போதுதான் அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்ய ஏதுவாக இருக்கும்.

என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கும் உதவிகளுக்கும் பொதுமக்கள் உங்கள் கிளையை அணுகலாம்?

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களுக்கான சேவையை madad.gov.in, emigrate.gov.in என்கிற 2 முக்கிய இணையதளங்கள் மூலம் பெறலாம். பொதுமக்களை பொறுத்தவரை எங்கள் கிளைக்கு அவர்களுடன் நேரடித் தொடர்பு கிடையாது.

எனெனில் அவர்களுக்கானப் பிரச்சினைகளுக்கும், உதவிகளுக்கும் மத்திய அரசு, email.gov.in, pvsk.gov.in ஆகிய 2 இணையதளங்களை அமைத்துள்ளது. அதில் அவர்கள் பதிவிட்டால் வெளியுறத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில், தேவைப்படும் உதவிகள் எங்கள் கிளையிடமிருந்தும் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

இந்தக் கிளையின் மூலமாக கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு செய்துள்ள புதிய வசதிகள் என்ன?

தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்தந்த நாடுகளைப் பொறுத்து விழிப்புணர்வும் பயிற்சியும் தேவைப்படுகிறது. மத்திய அரசின் குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகம், வெளிநாடு செல்பவர்களுக்காக 2018 முதல் பயிற்சி அளிக்கிறது. மத்திய அரசு அதிக முனைப்பு காட்டும் இப்பயிற்சி சென்னையில் 3 இடங்களில் அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை தமிழக அரசின் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான மறுவாழ்வு மற்றும் நல ஆணையம் நிர்வகிக்கிறது. பயிற்சிக்கான நிதியை வெளியுறவு அமைச்சம் அளிப்பதில் எங்கள் கிளை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இலவச குறுகிய காலப் பயிற்சியில் 2 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். ‘பிரவசி பீம யோஜ்னா’ எனும் பெயரில் வெளிநாடுளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு காப்பீடும் தொடங்கப்பட்டுள்ளது. பிரவசி பாரதிய சகாயக் கேந்திரா எனும் பெயரில் உதவி மையங்கள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு தேவைப்படும் உதவிகளை இந்த உதவி மையங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்யலாம். இது எங்கள் கிளை உட்பட வெளியுறவுத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உகந்த உதவிகள் அளிக்கப்படும்.

உங்கள் கிளையின் சேவைகளில் எதிர்கால திட்டங்கள் என்ன?

தமிழகத்தில் அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதில் உதவுவது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர புதிய திட்டங்கள் வகுத்து வருகிறோம். மேலும் ஒருங்கிணைப்பு பணிகளை விரைந்து செய்வதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்துகிறோம். இதற்காக அலுவலக விரிவாக்கப் பணிக்கான திட்டமும் உள்ளது.

சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஆணையத்தில் உங்கள் பங்கு என்ன?

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தேவை அவசியமாகும். இந்த தூதரகங்கள் மூலமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆணையம் செய்யும் உதவிகளில் எங்கள் கிளையின் ஒருங்கிணைப்பு பணி முக்கியமானதாகும். எனவே, தமிழக அரசின் நல ஆணையம், வெளிநாடுகளை அணுகுவதன் முக்கியத் தளமாக எங்கள் கிளை இருக்கும்.

பெட்டிச் செய்தி..

காங்கேயத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் விவசாயப் பொருளாதாரக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். கடந்த 2005-ல் குடிமைப் பணி தேர்வில் வென்று இந்திய வெளியுறத்துறை அதிகாரி ஆனார். செக் குடியரசு, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியத் தூதரகங்களிலும் வர்த்தகத்துக்கான முதல்நிலை செயலாளர் உள்ளிட்ட உயர் பணிகளையும் ஆற்றியவர். செக் குடியரசில் வர்த்தகப் பொருட்காட்சிகளில் திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கலந்துகொள்ள முடியாமல், அவர்களுக்கு போதுமான வர்த்தகம் இல்லாமல் இருந்தது. இவர்களுக்கு எனத் தனியாக தனது முயற்சியில் 2017-ல் வர்த்தகப் பொருட்காட்சியை நடத்தினார். இதன்மூலம் அந்நாட்டுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக உறவு பலப்பட அடித்தளமிடப்பட்டது. இவர் ஜப்பானில் பணியாற்றியபோது 2011-ல் அணு உலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த இந்தியர்களை மீட்டு அனுப்பியதில் முக்கியப் பங்காற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்