இ-ஷ்ரம் இணையதளத்தில் - 4 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு :

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாயினர்.

ஆனால் இவர்கள் குறித்த முறையான புள்ளிவிவரங்கள் இல்லாததால் அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை திரட்டவும், அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை ஆகஸ்ட் 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது.

இதற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டு தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இணையதளம் தொடங்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் 4.15 கோடி தொழிலாளர்கள்இதுவரை இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, "இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுக்கான நலத்திட்ட உதவிகளை எளிதில் நேரடியாகப் பெற முடியும். இதுவரை பதிவு செய்துள்ள 4.15 கோடி தொழிலாளர்களில் 50.6 சதவீதம் பேர் பெண்கள். அதிகமான தொழிலாளர்கள் வேளாண் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்தவர்களாக உள்ளனர்.

மேலும் பதிவானவர்களில் 65.68 சதவீதத்தினர் 16-40 வயதினராவர். 34.32 சதவீதத்தினர் 40 வயதுக்கு மேலானவர்கள் ஆவர்" என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்