போர்ப்ஸ் பட்டியலில் 52-வது இடம் - இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தேர்வு :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் செயல்படும் மிகச் சிறந்த நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிக வருவாய் ஈட்டுவது, அதிக லாபம், மிகப் பெரிய தொழில் குழுமம் என்ற வகையில் அது சிறப்பிடம் பெறுவதாக போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மிகச் சிறந்த நிறுவனங்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான பட்டியலில் சர்வதேச அளவில் 750 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 52-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் பிலிப்ஸ், சனோபி, பைஸர், இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

100 இடங்களுக்குள் இடம்பிடித்த பிற நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி (65), ஹைச்டிஎப்சி வங்கி (77), ஹெச்சிெல் டெக்னாலஜீஸ் (90) இடங்களில் உள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 119 வது இடத்திலும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் 127-வது இடத்திலும் உள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனம் 588 வது இடத்திலும், டாடா குழுமம் 746-வது இடத்திலும், எல்ஐசி 504-வது இடத்திலும் உள்ளன.

தங்கள் நிறுவனம் குறித்து ஊழியர்கள் அளித்த புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தென் கொரியாவின் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவதாக அமெரிக்காவின் ஐபிஎம், மூன்றாவதாக மைக்ரோசாப்ட் பிடித்துள்ளன. இதற்கடுத்த இடங்களை அமேசான், ஆப்பிள், ஆல்பாபெட், டெல் டெக்னாலஜீஸ் ஆகியவை பிடித்துள்ளன. சீனாவின் ஹூவெய் நிறுவனம் மிகச் சிறந்த தொழில் நிறுவனமாக 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

போர்ப்ஸ் நிறுவனம் ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து 58 நாடுகளில் மொத்தம் 1.5 லட்சம் முழு நேர பணியாளர்களிடம் ஆய்வு செய்து இந்த புள்ளி விவரத்தை சேகரித்து பட்டியல் தயாரித்துள்ளது.

ஊழியர்களிடம் நிறுவனம் குறித்த அபிப்ராயம், பொருளாதார நிலை, திறன் ஊக்குவிப்பு நடவடிக்கை, பாலின பேதம், சமூக பொறுப்புணர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2020-21-ம் ஆண்டில் கரோனா தொற்று காலத்திலும் 75 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பை அளித்துள்ளதையும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

முகம் தெரியாத வகையில், ஒளிவு மறைவின்றி கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற இந்திய நிறுவனங்கள் வருமாறு: பஜாஜ் (215), ஆக்ஸிஸ் வங்கி (254), இந்தியன் வங்கி (314), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (404), அமரராஜா குழுமம் (405), கோடக் மஹிந்திரா வங்கி (418), பாங்க் ஆப் இந்தியா (451), ஐடிசி, (453), சிப்லா (460), பாங்க் ஆப் பரோடா (496).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்