உலக பட்டினி குறியீட்டில் 101-வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா : பாகிஸ்தானை விட பின்தங்கியது

By செய்திப்பிரிவு

உலக அளவிலான பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இருந்து 101-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் உயரத்துக்கேற்ற எடை இல்லாமை, வயதுக்கேற்ற உயரம் இல்லாமை, குழந்தைகளின் இறப்பு விகிதம் முதலியவற்றை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 116 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 101-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 94-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் (92), வங்கதேசம் (76), நேபாளம் (76), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன.

பப்புவா நியு கினியா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ, மொசாம்பிக், ஹைதி, யேமன், சொமாலியா உள்ளிட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 15 நாடுகளே இந்தப் பட்டியலில் இந்தியாவை விட பின்தங்கியுள்ளன. சீனா, பிரேசில், குவைத் உட்பட 18 நாடுகள் இதில் சிறப்பான இடங்களை பிடித்திருக்கின்றன.

கரோனா தொற்றின் தாக்கம், வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளே இப்பட்டியலில் இந்தியா பின்தங்க காரணமாகி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பருவநிலை மாறுபாடு, பொருளாதார மற்றும் சுகாதார சவால்கள், மக்கள் மத்தியிலான பாரபட்சம் ஆகியவையும் உலக அளவில் வறுமை அதிகரிக்க முக்கய காரணம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்