பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் மின்னணு ஏலத்தில் விடும் பணியை கலாச்சாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டது.
இந்த ஏலம் நேற்று முன்தினத் துடன் முடிவுக்கு வந்தது. எனினும் 1,348 நினைவுப் பரிசுகளில் சில விற்கப்படாமல் இருந்தது. இவற்றுக்கான ஏலமானது இரவு வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய விளையாட்டு உபகரணங்கள் உட்பட பலபொருட்களின் ஏலம் மூடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்னணு ஏலத்தின் போது 8,600-க்கும் மேற்பட்ட ஏலங்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக சர்தார் படேல் சிற்பம் 141 முறை ஏலம் கேட்கப்பட்டது. மர விநாயகர் 117 முறையும், புனே மெட்ரோவின் நினைவுச் சின்னம் 104 முறையும், வெற்றிச் சுடரின் நினைவுச்சின்னம் 98 முறையும் ஏலம் கேட்கப்பட்டது.
அதிக தொகையின் அடிப்படை யில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1.5 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது. பவானி தேவியின் வாள் ரூ.1.25 கோடிக்கும், சுமித் அன்டிலின் ஈட்டி ரூ.1.02 கோடிக்கும், பாராலிம்பிக் குழுவினர் கையெழுத்திட்ட அங்கவஸ்த்ரா ரூ.1 கோடிக்கும், குத்துச்சண்டை வீராங்கனையான லோவ்லினா போர்கோ ஹெய்ன் பயன்படுத்திய கையுறை ரூ.91லட்சத்துக்கும் ஏலம் சென்றுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago