68 ஆண்டுக்கு பிறகு மீண்டும் டாடா கையில் ஏர் இந்தியா : மத்திய அரசுக்கு ரூ.2,700 கோடி வருமானம்

By செய்திப்பிரிவு

ஏர் இந்தியா ஏல விற்பனையில் டாடா சன்ஸ் நிறுவனத்தை வெற்றியாளராக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சமீபத்திய ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனமும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கும் போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

அஜய் சிங் ரூ.15,100 கோடிக்கு விண்ணப்பித்த நிலையில் ரூ.18,000 கோடிக்கு விண்ணப்பித்த டாடா சன்ஸ் ஏலத்தில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவதாக முதலீடுகள் மற்றும் பொது சொத்துகள் நிர்வாக துறையின் செயலர் துஹின் காந்தா பாண்டே கூறினார். இதில் ரூ.2,700 கோடி அரசுக்கு பணமாகக் கிடைக்கும். மீதமுள்ள ரூ.15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்காக டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் 100 சதவீத பங்குகள் மற்றும் ஏர் இந்தியா சாட்ஸில் 50 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் குழுமத்துக்கு சொந்தமாகும்.

ஜேஆர்டி டாடா தொடங்கிய ஏர் இந்தியா 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா குழுமத்துக்கே சொந்தமாகியிருப்பது மிகவும் பெருமிதமிக்க தருணமாகும். இந்த மகிழ்ச்சியை இந்திய விமான சேவைத் துறையின் முன்னோடி ஜேஆர்டி டாடாவுக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி கொள் கிறேன் என்று டாடா சன்ஸ் குழும தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இந்த தருணத்தில் ஜேஆர்டி டாடா இருந்திருந்தால் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார் என ரத்தன் டாடா ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஓராண்டுக்கு ஏர் இந்தியாவின் 51 சதவீத பங்கை டாடா சன்ஸ் நிர்வகித்து வர வேண்டும். மேலும் ஓராண்டுக்குப் பிறகே பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். ஏர் இந்தியாவின் ஊழியர்களையும் ஓராண்டுக்கு பணியிலிருந்து நீக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவின் மொத்த கடன் ரூ.65,562 கோடியாக உள்ளது. இந்த விற்பனைக்கு பிறகு ரூ.46,262 கோடி கடன் ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்படும். 1932-ல் ஜேஆர்டி டாடாவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தை 1953-ல் நாட்டுடைமையாக்கியது. ஏர் இந்தியாவிடம் தற்போது மொத்தமாக 141 விமானங்கள் உள்ளன. ஏர் இந்தியா 42 நாடுகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது. ஏர் இந்தியா மற்றும் ஏஐஎக்ஸ்எல் இரண்டிலும் சேர்த்து 13,500 பணியாளர்கள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்