சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இ-சொத்து அட்டை திட்டம் கிராமப் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி உள்ளதாகவும் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இ-சொத்து அட்டை (ஸ்வமித்வா) திட்டத்தை சோதனை முறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். கிராமப்புறங்களில் சொத்து உரிமையை தெளிவாக நிறுவுவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்படி, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் (ட்ரோன்) நிலப்பரப்பை அளவிட்டு வரைபடம் உருவாக்கப்பட்டு நில உரிமையாளர்களுக்கு மின்னணு சொத்துஅட்டை வழங்கப்படும். அதில் சம்பந்தப்பட்ட நபருக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்ததிட்டத்தின் மூலம் சமூக-பொருளாதார நிலை மேம்படுவதுடன் கிராமங்கள் தன்னிறைவு பெறும் என மத்திய அரசு கருதுகிறது.
22 லட்சம் சொத்து அட்டை
இந்நிலையில், மத்திய பிரதேசமாநிலம் ஹர்தா மாவட்டத்தில் காணொலி மூலம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 1.7 லட்சம் பேருக்கு இ-சொத்து அட்டையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். பின்னர் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:ஸ்வமித்வா திட்டம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இதன்படி இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் 3 ஆயிரம் கிராமங்களுக்குட்பட்ட 1.7 லட்சம் குடும்பங்களுக்கு இ-சொத்து அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சொத்து அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம், அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து கடன் வாங்குவதை கிராம மக்கள் தவிர்க்க முடியும். இதுபோன்ற காரணங்களால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் கிராமப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது.
இந்த திட்டம் கிராமங்களின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். கிராம சுயாட்சிக்கு எடுத்துக்காட்டாக இந்த திட்டம் விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago