இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அடுத்த 6 மாதங்கள் வரை நீடிக்கலாம் என மத்திய மின் துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மின்சார தேவை அதிகரித்துவரும் நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பாதிக்கும் மேலான மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மின் உற்பத்தி நிலையங்களின் சராசரி நிலக்கரி இருப்பு 13 நாட்களுக்கானதாக இருந்தது. ஆனால் செப்டம்பர் மாத இறுதியில் நிலக்கரி இருப்பு 4 நாட்களுக்கும் குறைவானதாக குறைந்துள்ளது. குறிப்பாக 40 முதல் 50 கிகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நிலையங்களில் தற்போதைய நிலக்கரி இருப்பு 3 நாட்களுக்கும் குறைவாக உள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் இந்த நிலையங்களின் பங்கு 203 கிகா வாட் ஆகும்.
இந்த நிலக்கரி தட்டுப்பாடு அடுத்த 5 முதல் 6 மாதங்களுக்கோ, அல்லது நான்கு முதல் 5 மாதங்களுக்கோ நீடிக்க வாய்ப்புள்ளது. இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாக உள்ளது என்று மத்திய மின் துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியுள்ளது. இது அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மாற்று ஆற்றல் சக்திகளில் அதிக கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியின் தேவை அதிகமாக இருக்கும். நிலக்கரி உற்பத்தி குறைவு, நிலக்கரி விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் மின்வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே மத்திய அமைச்சகங்கள் நாட்டின் மின் தேவைக்குத் தேவையான நிலக்கரியை உற்பத்தி செய்ய கோல் இந்தியா லிமிடெட், என்டிபிசி ஆகிய அரசு நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களிடம் நிலக்கரி சுரங்க உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளன. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி இருப்பையும் முக்கிய தேவையின் அடிப்படையில் நிலக்கரி சப்ளை செய்யப்படுவதையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago