தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாகவும், உலக தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகவும் பாகிஸ்தான் விளங்குவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை கண்காணித்து வரும் ஐ.நா. சபையின் முதல் செயற்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் கான், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர், ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாகவும், இந்த விஷயத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஏ. அமர்நாத் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது; சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்கியது ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் ஆகும். இதனை பல முறை தெளிவுப்படுத்திவிட்ட போதிலும், பாகிஸ்தான் இந்தப் பிரச்சினையை சர்வதேச தளங்களில் எழுப்பி வருவது கண்டனத்துக்குரியது.
மனித உரிமைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் என்றும் மரியாதை அளிக்கும் நாடு இந்தியா. ஆனால், மனித உரிமையை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்கியும், உலக தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகவும் இருக்கும் பாகிஸ்தான், மனித உரிமை குறித்து இந்தியாவுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமின்றி, காஷ்மீரில் இப்போது பிரச்சினையாக இருப்பது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகள்தான். அந்தப் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago