சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, கிரண் மஜூம்தார் ஷாவின் கணவர் உட்பட 380 இந்தியர்கள் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக பாண்டோரா பேப்பர்ஸ்அறிக்கையில் அம்பலமாகியுள்ளன.
150 சர்வதேச செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 600-க்கும்மேற்பட்ட புலனாய்வு செய்தியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே), 14 சர்வதேச நிறுவனங்களிடமிருந்து திரட்டிய 1.2 கோடி ரகசிய ஆவணங்களை ‘பாண்டோரா பேப்பர்ஸ்’ அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதில் 90 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பனாமா, ஹாங்காங், ஆப்பிரிக்காவின் சீஷெல்ஸ் தீவு, சைப்ரஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட வரி குறைவாக உள்ள நாடுகளில் பங்குகள், கலைப் பொருட்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முறைகேடாக முதலீடு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தாஆகியோர் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் முதலீடு செய்தது அம்பலமாகியுள்ளது.
சாஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தில் பங்குதாரர்களாக சச்சின்டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மாமனார் ஆனந்த்மேத்தா ஆகியோர் இருப்பதுபனாமா சட்ட நிறுவனம் அல்கோகல் ஆவணங்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து சச்சின் தரப்பு வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கத்தில் ‘சச்சின் முதலீடு குறித்த விவரங்கள் அனைத்தும் வருமானவரித் துறையினரிடம் சமர்ப்பித்துள்ளோம். அவற்றில் எந்தவித சட்ட விதிமீறல்களும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது உறவினர்கள் வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
2018-ல் பிஎன்பி வங்கி மோசடியில் சிக்கி நாட்டை விட்டு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் முதலீடுகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் ஷாவின் கணவர் பெயரில் வெளிநாடுகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இவர் ஏற்கெனவே இன்சைடர் டிரேடிங் செய்ததற்காக செபி மூலம் தடைக்கு உள்ளானவர். இந்த குற்றச்சாட்டுகளை பயோகான் நிறுவனம் மறுத்துள்ளது.
700 பாகிஸ்தானியர்கள்
இந்த வரி ஏய்ப்பு பட்டியலில்700-க்கும் மேலான பாகிஸ்தானியர்கள் பெயர்களும் சிக்கியுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர்களும், அமைச்சர்களும் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.ஜோர்டான் மன்னர் அப்துல்லா,செக் குடியரசின் பிரதமர் ஆந்த்ரேஜ் பேபிஸ், அஜர்பைஜான் அதிபர் இல்காம் அலியேன் குடும்பத்தினரும், அவருக்கு நெருக்கமானவர்களும் இங்கிலாந்தில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை ரகசியமாக வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் அவரது மனைவியும் குறுக்குவழியில் முதலீடுகள் மேற்கொண்டு லண்டனில் சொத்துகளை வாங்கியுள்ளனர்.
கென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா, அவரது குடும்பத்தினரும் பட்டியலில் சிக்கியுள்ளனர். ரஷிய அதிபர் புதின் பெயர் நேரடியாக இடம்பெறாவிட்டாலும், அவருடைய உதவியாளர்கள் பெயர்கள் பாண்டோரா பேப்பர் ஸில் சிக்கியுள்ளது.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
பாண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் சிக்கியுள்ள நபர்களின் முதலீடுகள், சொத்துகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.வருமான வரித் துறை, மறைமுக வரிகள் துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி மற்றும் நிதி புலனாய்வு பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து பாண்டோரா பேப்பர்ஸ் தகவல் குறித்துவிசாரணையை மேற்கொள்ளும் எனவும், இது சார்ந்து பிறநாடுகளுடன் இணைந்து செயல்படும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago