நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதன் மூலம் - தலைநகர் டெல்லியின் கழுத்தை நெரிக்கிறீர்கள் : விவசாய சங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயசங்கங்கள் கடந்த ஓர் ஆண்டாகடெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. டெல்லியில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் போராட்டம் வன்முறையில் முடிந்தது. மத்தியஅரசுடன் விவசாயிகளின் பிரதிநிதிகள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், டெல்லிக்குள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாய சங்கங்களுக்கு அனுமதி வேண்டும் என்று கோரிஉச்ச நீதிமன்றத்தில் கிசான் மகாபஞ்சாயத் என்ற விவசாய சங்கம்சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகை யில், ‘‘நெடுஞ்சாலைகளில் அமர்ந்துபோராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் டெல்லியின் கழுத்தை விவசாய சங்கங்கள் நெரிக்கின்றன. டெல்லிக்கு வரும், டெல்லியில் இருந்து செல்லும் வாகனப் போக்குவரத்தின் குரல்வளையை நெரித்துவிட்டு, இப்போது, நகருக்கு உள்ளே வந்து போராட அனுமதி கேட்கிறீர்கள். சுதந்திரமாக நடமாட குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆனால் மக்களின் நடமாட்டத்தை நீங்கள் முடக்கியுள்ளீர்கள். நீங்கள் போராட்டம் நடத்தும் இடத்தைச் சுற்றியுள்ள மக்கள், போராட்டத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? இதுபற்றி அவர்களின் கருத்தைக் கேட்டீர்களா? பாதுகாப்பு படையினர் செல்வதைக் கூட தடுத்து நிறுத்தி உள்ளீர்கள். இப்போது நகருக்கு உள்ளேயும் வந்து போராட்டம் நடத்தி குழப்பம்ஏற்படுத்த விவசாய சங்கங்கள் விரும்புகின்றனவா?’’ என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு கிசான் மகாபஞ்சாயத் அமைப்பின் வழக்கறிஞர், ‘ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டம் நடத்துவதற்குத்தான் அனுமதிகோருகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘‘சத்தியாகிரக போராட்டத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? போராட்டம் நடத்துகிறீர்கள். அதே நேரம் நீதி மன்றத்துக்கும் வருகிறீர்கள். போராட்டம் நடத்திக் கொண்டே நீதிமன்றத்துக்கும் வரக்கூடாது. ஏற்கெனவே வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளன. அப்படி இருக்கும்போது போராட்டம் நடத்துவது ஏன்? நீதித்துறையை எதிர்த்து போராட்டம் நடத்துகிறீர்களா? நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சாலை மறியல் போராட்டத்தில் கிசான் மகாபஞ்சாயத் அமைப்பு பங்கு பெறவில்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள். அதன் பிறகு விசாரணை நடத்துகிறோம். பிரமாணப் பத்திரத்தின் நகலை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலுக்கும் அனுப்பி வையுங்கள்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு டெல்லியில் இடம் ஒதுக்குவது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு, டெல்லி துணை நிலை ஆளுநர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்