காங்கிரஸ் கட்சியில் நீடிக்க மாட்டேன் - பாஜகவில் சேரப்போவதில்லை : அஜித் தோவலை சந்தித்த அமரீந்தர் சிங் தகவல்

By செய்திப்பிரிவு

பாஜகவில் சேரப்போவதில்லை என்றும் அதேநேரம் காங்கிரஸிலும் நீடிக்க மாட்டேன் என்றும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வராக பதவி வகித்த கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.இந்நிலையில், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அமரீந்தர் சிங்.இதையடுத்து, சரண்ஜித் சிங் சன்னிபுதிய முதல்வராக பொறுப்பேற்றார். இதனிடையே பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்த சித்து கடந்த 2 தினங்களுக்கு முன்புதனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் முகாமிட்டுள்ள அமரீந்தர் சிங்நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதனால் அவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், பல மாதங்களாக தொடர்ந்து நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக அமரீந்தர் சிங் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமரீந்தர் சிங் நேற்று சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அமரீந்தர் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கென தனிக் கொள்கை, நம்பிக்கை உள்ளது. கடந்த செப்டம்பர் 18-ம்தேதி காலை 10.30 மணிக்கு முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சித் தலைவர் சோனியா என்னிடம் கூறினார். நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினேன்.

இப்போதுவரை நான் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கிறேன். ஆனால் இனியும் நீடிக்க மாட்டேன். கட்சித்தலைமைக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையில் அக்கட்சியில் நான் எப்படி நீடிக்க முடியும். அதேநேரம் நான் பாஜகவிலும் சேரமாட்டேன்.

சித்து முதிர்ச்சியற்றவர். அவர் நிலையானவர் இல்லை என்பதை தொடர்ந்து கூறி வருகிறேன். குழந்தைத்தனமாக அவர் நடந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் செல்வாக்கு சரியும் என்றும் ஆம் ஆத்மி வளர்ச்சி அடையும் என்றும் சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்