ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன்கடைக்காரர்களுக்கு அங்குள்ள தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கனில் தெற்கில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு மாகாண அரசின் களங்கம் மற்றும் நல்லொழுக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சலூன் கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பில், யாராவது இந்த உத்தரவை மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஆப்கனில் தலிபான்களின் முந்தைய ஆட்சியில் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்று பழமைவாத இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர். ஆனால் 2001-ல்அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு ஆண்கள் தாடியை மழித்துக் கொள்வதும் ட்ரிம் செய்து கொள்வதும் அங்கு பிரபலமாகிவிட்டது.
இதுகுறித்து லஷ்கர் பிலால் அகமது என்பவர் கூறும்போது, “இந்த உத்தரவை கேட்டதும் எனது மனம் உடைந்துவிட்டது. இந்த நகரில் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை பின்பற்றுகின்றனர். எனவே அவர்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.
ஷெர் அஃப்சல் என்ற சலூன் கடைக்காரர் கூறும்போது, “முடி திருத்தம் செய்துகொள்ளும் ஒருவர் மீண்டும் எங்கள் கடைக்குவர 40 முதல் 45 நாட்கள் வரை ஆகும். இந்த உத்தரவு எங்கள் தொழிலை மிகவும் பாதிக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago