அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி,அந்நாட்டில் பல்வேறு அருங்காட்சி யகங்களில் வைக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கு சொந்தமான 157 பழங்கால கலைப்பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்.
பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவுக்குசொந்தமான பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள் உள்ளன. இந்த கலைப்பொருட்கள் யாவும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டவை ஆகும். இதுபோன்ற பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் சில ஆண்டுகளாக மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டில் பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த 157 பழமையான இந்திய கலைப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை 11 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை ஆகும். 8.5 செ.மீ. உயரம்கொண்ட வெண்கல நடராஜர் சிலை, லட்சுமி சிலை, புத்தர் சிலை, விஷ்ணு சிலை, சிவபார்வதி சிலை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கலைப்பொருட்களையும் தன்னுடன் கொண்டு வந்தார்.
20 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், 76-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் டெல்லியிலிருந்து கடந்த 22-ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி.அமெரிக்காவில் தங்கியிருந்தபோது 65 மணி நேரத்தில் 20 சந்திப்புகளை அவர் நடத்தியுள்ளார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு விமானத்தில் செல்லும்போதும், வரும்போதும் அதிகாரிகளுடன் 4 நீண்டசந்திப்புகளை அவர் நடத்தியுள்ளார். மேலும் வாஷிங்டனில் தங்கியிருந்த ஓட்டலில் அவர் 3 சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
செப்டம்பர் 23-ம் தேதி பல்வேறு நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். செப்டம்பர் 23-ம் தேதி காலையில் அவர் 5 சந்திப்புகளில் பங்கேற்றார். மாலை நேரத்தில் தனது குழுவினருடன் 3 கூட்டங்களை அவர் நடத்தியுள்ளார்.
செப்டம்பர் 24-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதன் பிறகு தனது குழுவினருடன் 4 கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
செப்டம்பர் 25-ம் தேதி அமெரிக் காவிலிருந்து திரும்பும்போது விமானத்திலேயே 2 சந்திப்புகளை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 65 மணி நேரத்தில் அவர் 20 கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago