அறக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட பணத்தில் ஹைதராபாத் நகரில் அறக்கட்டளை மருத்துவமனை கட்டப்பட்டு ஏழைகளுக்கு உதவுவேன் என்றும், விதிகளை மீறி செயல்படவில்லை என்றும் பாலிவுட் நடிகர் சோனு சூட் கூறினார்.
நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிக அளவில் இந்திப் படங்களில் நடிப்பது போலவே, தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பல படங்களில் வில்லனாக நடித்துள்ள அவர், அண்மைக்காலமாக நடிப்பைத் தாண்டி சமூகநலச் சேவைகளுக்காகவும் ஹீரோவாக அறியப்பட்டார். கரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது வெளிமாநிலத்திலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தார்.
இதனால்தான், அண்மையில் அவர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கல்விக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், மக்கள் அபிமானம் பெற்றுள்ள சோனு சூட்டை, பஞ்சாப் மாநிலத் தேர்தலில் களமிறக்க ஆம் ஆத்மிக்கு திட்டமிருப்பதாகவும் அதன் வெள்ளோட்டமாகவே அவருக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மையில் சோனு சூட்டின் மும்பை வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் ரூ.20 கோடி வரை நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் கூறும்போது, "நடிகர் சோனு சூட் தனது கணக்கில் காட்டப்படாத வருமானத்தை எல்லாம், போலியான கடன் பத்திரங்களாகக் காட்டியுள்ளார். வரி ஏய்ப்புக்காகவே இதனை அவர் திட்டமிட்டு செய்துள்ளார்.
சோனு சூட் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக கரோனா வைரஸ் முதல் அலை தொடங்கி இந்த ஏப்ரல் மாதம் வரை ரூ.18 கோடியை பல்வேறு வழிகளில் நிதியுதவியாகப் பெற்றுள்ளார். இதில் ரூ.1.9 கோடி நிதி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.17 கோடி பயன்படுத்தப்படாமல் அவரது கணக்கிலேயே உள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையின் சோதனைகள் முடிந்த நிலையில் நடிகர் சோனு சூட் நிருபர்களிடம் கூறியதாவது: வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 4 நாட்களாக நடைபெற்றது. தற்போது அது முடிந்துள்ளது. என்னுடைய வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை நான் நன்றாக கவனித்துக் கொண்டேன். அவர்களை நான் மிகவும் `மிஸ்` செய்கிறேன்.
என்னுடைய வீட்டில் அவர்கள் மிகவும் சவுகர்யமாக இருந்தனர். அவர்களுக்கு இது சிறப்பான அனுபவமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களை நான் மிஸ் செய்கிறேன் என்று அப்போது அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதற்கு சிரித்துவிட்டனர்.
நான் திரட்டிய நிதியில் தற்போது ரூ.17 கோடி அப்படியே உள்ளது. இந்தத் தொகையில் ஹைதராபாதில் அறக்கட்டளை மருத்துவமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ரூ.2 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
அறக்கட்டளை மூலமாக பெறப்படும் பணத்தை செலவழிக்க ஓராண்டு கால அவகாசம் உள்ளது. ஒருவேளை அந்த கால அவகாசத்தில் பணத்தை செலவழிக்க முடியாமல் போனால் மேலும் ஓராண்டு காலத்தை எடுத்துக் கொள்ள விதிமுறைகள் உள்ளன.
நான் இந்த அறக்கட்டளை சில மாதங்களுக்கு முன்புதான் அதாவது கரோனா 2-வது அலை முடியும் நேரத்தில்தான் தொடங்கினேன். முதல் அலையின்போது வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஊர் திரும்ப பஸ்களை ஏற்பாடு செய்துகொடுத்தோம். இதற்காக யாரிடமும் தொகையை நான் பெறவில்லை.
அறக்கட்டளை தொடங்க முடிவு செய்த பின்னர்தான் நான் மற்றவர்களிடம் நிதி திரட்டினேன். விதிமுறைகளின்படி பணத்தை செலவு செய்ய எனக்கு இன்னும் 7 மாதங்கள் கால அவகாசம் உள்ளது. மக்கள் கஷ்டப்பட்டு பெற்ற பணத்தை நான் வீணாக்க மாட்டேன். நான் பணம் சம்பாதித்ததும் கஷ்டப்பட்டுத்தான். எனவே பணத்தின் அருமை எனக்குத் தெரியும். விதிமுறைகளை மீறி நான் செயல்படவில்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago