வரும் 31-க்குள் ஆப்கனை விட்டு வெளியேற வேண்டும் : அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் பான்ஷிர் பள்ளத்தாக்கை தவிர்த்து இதரபகுதிகள் அனைத்தும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க அரசு, தலிபான்களுடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையில், ஆக. 31-க்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும். அதுவரை தலிபான்கள் புதிய அரசு அமைக் கக்கூடாது என்று உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் மட்டும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கு 6,000 அமெரிக்க வீரர்கள், 900 பிரிட்டிஷ் வீரர்கள் மற்றும் நேட்டோ நாடுகளின் வீரர்கள் முகாமிட்டு நேட்டோ நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்டு அவரவர் நாடுகளுக்கு ராணுவ விமானங்களில் அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே மீட்புப் பணிகளை நிறைவு செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது. கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த தனியார் தொலைக்காட்சிக்கு தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுகைல் ஷாகீன் அளித்த பேட்டியில், "ஆகஸ்ட் 31-ம்தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஒருவேளை அமெரிக்காவோ, பிரிட்டனோ கூடுதல் கால அவகாசம் கோரினால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது நம்பிக்கை துரோகம் ஆகும். வரும் 31-ம் தேதிக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்