டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் 23 வயதான நீரஜ் சோப்ரா 87.58மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதேவேளையில் ரவிகுமார் தஹியா, மீராபாய் சானு ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், லோவ்லினா போர்கோஹெய்ன், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா, ஆடவர் ஹாக்கி அணியினர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இந்நிலையில் நீரஜ் சோப்ராஉள்ளிட்ட தடகள வீரர்களுக்கு இந்திய தடகள சம்மேளனம் சார்பில் நேற்று டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் இந்திய தடகள சம்மேளனத்தின் திட்டக்குழு தலைவரான லலித் பானோத் பேசும்போது, “ஈட்டி எறிதல் விளையாட்டை இந்தியா முழுவதும் ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7-ம் தேதி (டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற நாளை குறிக்கிறது) தேசிய ஈட்டி எறிதல் தினமாக நாங்கள் கொண்டாடுவோம். அடுத்த வருடம் முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி எங்களது அமைப்பின் கீழ் செயல்படும் அனைத்து மாநில சங்கங்களும் ஈட்டி எறிதல் போட்டியை நடத்தும். அதன் பின்னர் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். வரும் ஆண்டுகளில் ஈட்டி எறிதல் விளையாட்டை தேசிய நிகழ்வாக மாற்றுவோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago