ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷரிப் நகரில் சண்டை நடைபெறுவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய துணைத்தூதர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை தலிபான்கள் 4 மாகாணங்களை கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோல, பால்க் மாகாண தலைநகரான மசார்-இ-ஷரிப் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. இதையடுத்து, அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மசார்-இ-ஷரிப் நகரிலிருந்து இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, மசார்-இ-ஷரிப் நகரில் உள்ள இந்திய துணைத் தூதர் நேற்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்ப விரும்பும் இந்தியர்கள், தங்கள் பெயர், பாஸ்போர்ட் எண், காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை துணைத் தூதரகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago