2020-ம் நிதியாண்டில் வசூலித்ததேர்தல் நிதியில் பாஜக முதலிடம் :

By செய்திப்பிரிவு

கடந்த 2019-20-ம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதிவசூலில் பாஜக முதலிடம் வகிக்கிறது.

மத்திய அரசு கடந்த 2017-18-ம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, தனி நபர்,நிறுவனங்கள் ஆகியவை கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. இதன் மூலம் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி விவரம் வெளிப்படையாக தெரியவந்தது.

இந்நிலையில், 2019-20-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.3,623 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதில், ரூ.2,555 கோடி நன்கொடையை தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெற்று, பாஜக முதலிடத்தை பிடித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக காங்கிரஸ் ரூ.682 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதியாக ரூ.143.67 கோடியை பெற்றுள்ளது. அதிமுக ரூ.89 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ரூ.158.62 கோடியையும், பகுஜன்சமாஜ் ரூ.58.25 கோடியையும், சிவசேனா ரூ.41 கோடியையும், தேசியவாத காங்கிரஸ் ரூ.85.58 கோடியையும் பெற்றுள்ளன.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ரூ.130.46 கோடியையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.92.73 கோடியையும், தெலுங்கு தேசம் கட்சி ரூ.91.5 கோடியையும், பிஜு ஜனதா தளம் ரூ.90.35 கோடியையும் தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளன. தேர்தல் பத்திர விற்பனை தொடங்கியதில் இருந்து 2020 மார்ச் வரையான காலகட்டத்தில் பாஜக 68% தேர்தல் பத்திரங்களை பெற்றுள்ளது.

பாஜக 2018-19-ம் நிதியாண்டில் ரூ.1,450 கோடியை தேர்தல் நிதியாக பெற்றது. ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட பாஜகவின் அறிக்கை தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையிலிருந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்