கடல் போக்குவரத்து பிரச்சினைக்கு : தீர்வு காண்பதற்கு 5 அம்ச திட்டம் : ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி யோசனை

By செய்திப்பிரிவு

கடல்வழி போக்குவரத்து பிரச் சினைகளுக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்தைப் பின்பற்றலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் சக்தி வாய்ந்த அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் கருதப்படுகிறது. இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை வகிப்பது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நமது பூமியின் எதிர்காலம் கடலையே நம்பி இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகவும் கடல் உள்ளது. கடல்வழி போக்குவரத்தில் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் நீடிக்கின்றன. பல்வேறு நாடுகளிடையே கடல் எல்லை பிரச்சினை நீடிக்கிறது. கடல் கொள்ளை, தீவிரவாத பிரச்சினைகளும் தொடர்கின்றன.

கடல்வழி போக்குவரத்து பிரச்சினைகளுக்கு எந்தவொரு நாடாலும் தனித்து தீர்வு காண முடியாது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதற்கு5 அம்ச திட்டத்தை முன்மொழி கிறேன்.

 சிந்து சமவெளி நாகரிக காலத்தில் லோத்தல் (குஜராத்) நகரில் துறைமுகம் செயல்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வணிகம் நடைபெற்றது. இதுபோல் பழங்காலத்தில் சுதந்திரமான கடல்வழி போக்குவரத்துஇருந்தது. இதன் காரணமாகதான் உலகம் முழுவதும் புத்தரின் போதனைகள் சென்றடைந்தன. இதேபோல சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.

 கடல்சார் போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்சினை களுக்கும் சர்வதேச சட்ட விதிகளின்படி தீர்வு காண வேண்டும். இதன்மூலம் உலகின் அமைதி, ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும்.

 புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஒட்டுமொத்த உலகத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இயற்கைபேரிடர்களை முன்கூட்டியே கணித்து, திறம்பட எதிர்கொள்வதில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதேபோல கடல் கொள்ளையை தடுக்கவும் அனைத்து நாடுகளும் ஓரணியில் நிற்க வேண்டும்.

 கடலின் சுற்றுச்சூழல், வளங்களைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். பருவநிலை மாறுபாட்டுக்கும் கடலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. கடலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

 கடல்வழி போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.கடல்வழி வர்த்தகத்தின் உள்கட்டமைப்புகளை வலுப் படுத்த வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்