குடும்ப வறுமை காரணமாக பச்சிளம் குழந்தையை ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற தாய் ஒருவர், பிரிவை தாங்க முடியாமல் பிறகு குழந்தையை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
ஹைதராபாத் பூச்சிபள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் அழகான பெண் பிறந்தது. கரோனாவால் ஏற்கெனவே பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டிருந்த இக்குடும்பத்தால் குழந்தைக்கு போதிய பால் கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் குழந்தையை விற்றுவிட முடிவு செய்துள்ளனர். இதன்படி, 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதே பகுதியை சேர்ந்த சாந்தம்மா என்பவருக்கு ரூ.3 ஆயிரத்திற்கு ராதா கொடுத்துள்ளார்.
பிறகு வீட்டுக்கு வந்தும் குழந்தையின் நினைவாகவே ராதா இருந்துள்ளார். எவ்வளவு முயன்றும் அவரால் குழந்தையை மறக்க முடியவில்லை. இதையடுத்து ரூ.3 ஆயிரம் பணத்துடன் சாந்தம்மா வீட்டுக்குச் சென்று குழந்தையை திரும்பத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் இதனை சாந்தம்மா ஏற்கவில்லை. இறுதியாக ரூ.10 ஆயிரம் கொடுத்தால் குழந்தையை தருகிறேன் என அவர் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராதா, இதுகுறித்து பூச்சிபள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார், சாந்தம்மாவின் வீட்டுக்குச் சென்று குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago