கல்லால் அடித்துக் கனிந்த கனி :

By ச.தமிழ்ச்செல்வன்

தேனி தாலுகாவில் உள்ள கிராமம் பூமலைக்குண்டு. ஐந்து தலைமுறைக்கு முன் அங்கே தொப்பம்மாள் என்கிற பெண் வாழ்ந்துவந்தாள். அவளை அதே ஊரில் மணம் முடித்துக்கொடுத்திருந்தார்கள். மாமனார், கொழுந்தனார், கணவர் எனக் கூட்டுக்குடும்பமாக அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவளுக்கு ஒரு மகனும் பிறந்தான். மகன் பிறந்த சிறிது காலத்திலேயே அவளுடைய கணவன் இறந்துவிட்டான். அவளுடைய மகனைக் குடும்பத்தார் நன்றாகப் பேணி வளர்த்தார்கள்.

அன்றைய நாட்களில் கணவனை இழந்தவள் காலையில் எதிரே வந்தால் அபசகுனம் என்று மக்கள் நம்பினார்கள். இன்றும் அந்த நம்பிக்கையின் தொடர்ச்சி வெவ்வேறு தேய்ந்த வடிவங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஆகையால், தொப்பம்மாள் ஊர் விழிப்பதற்கு முன்பே விழித்துத் தன் கணவன் வீட்டாருக்குச் சொந்தமான தோட்டத்துக்கு வேலை செய்யப் போய் விடுவாள். ‘எதுக்கு நம்மால மத்தவங்களுக்குக் கஷ்டம்?’ என்று நினைத்தாள்.

அவளுடைய கொழுந்தனோ அவள் மீது ஆசை வைத்தான். அவளை அணுகிப் பார்த்தான். அவள் அவனை மறுத்ததோடு “ஊரைக் கூட்டிச் சொல்லி விடுவேன்” என்று எச்சரித்தாள். ஆத்திர மடைந்த கொழுந்தன் இவளைப் பழி வாங்கக் காத்திருந்தான். ஒருநாள், அதிகாலையில் தொப்பம்மாள் காட்டுக்குப் பருத்தி எடுக்கப் போய் விட்டாள். அவளுக்கு முன்னால் அவளுடைய கொழுந்தன் எழுந்து காட்டுக்குப் போய் ஒரு மரத்தின் மீது ஏறி மறைந்துகொண்டு அவளை நோட்டம் இட்டுக் கொண்டிருந்தான்.

கொழுந்தனின் சூழ்ச்சி

அப்போது யாரோ ஒரு வெளியூர்க்காரன் முயல்வேட்டைக்கு வந்தவன் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தேடிக்கொண்டிருந்தான். தொப்பம்மாளைப் பார்த்துச் சுண்ணாம்பு கேட்டான். தொப்பம்மாள் வேலை செய்யும் தோட்டத்தைச் சுற்றிலும் வேலி போட்டிருந்தது. வேலிக்கு அந்தப் பக்கம் இருந்து கேட்டான். இவளும் வெற்றிலை போடுகிறவள் என்பதால் சுண்ணாம்பு வைத்திருந்தாள். அதை அவனுக்குக் கொடுக்கக் கையை நீட்டிக்கொண்டு போனாள். வேலிப் பக்கமிருந்து அவன் கையை நீட்டும்போது அவன் கையில் முள் குத்தி ரத்தம் வந்துவிட்டது. ஆகவே, அவள் “உன்னிடமுள்ள கம்பியை நீட்டு. அதில் நான் சுண்ணாம்பைத் தடவுகிறேன்” என்று சொன்னாள்.

இதற்கிடையில் மரத்தில் ஒளிந்திருந்த கொழுந்தன் இறங்கி ஓடிப்போய் ஊராரைக் கூட்டி வந்து விட்டான், “இவள் நடத்தை கெட்டவள்; வெளியூர்க்கார னோடு இவளுக்குத் தொடர்பிருக்கிறது” என்று ஆவேசமாகக் கூப்பாடு போட்டான். நான் அந்த ஆளுக்குச் சுண்ணாம்பு கொடுத்தது உண்மை. அதற்கு மேல் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொன்னாள். அவள் பேச்சை யாரும் கேட்க வில்லை. கொழுந்தனின் பேச்சைக் கேட்டு அவளை ஊருக்கு மேற்கே இருந்த மலையின் அடிவாரத்துக்கு இழுத்துச் சென்று அவளுடைய இனத்தார் எல்லோரும் ஆள் ஆளுக்குக் கல்லால் அடித்தே அவளைக் கொன்று போட்டார்கள். அவள் உடலை அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டனர்.

புலியாக மாறிய பெண்

அவள் கொல்லப்பட்ட மூன்றாம் நாள் அவளுடைய மகன் காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவள் ஒரு புலி ரூபத்தில் வந்து தன் மகனை இழுத்துக்கொண்டுபோய் தான் கொல்லப்பட்ட இடத்திலேயே கொன்று அவனையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.

அப்புறம் என்ன? அதன் பிறகு பல ஆண்டுகள் அந்த ஊரில் மழையே பெய்யவில்லை. அவள் கணவன் வீட்டாருக்கும் அவளைக் கல்லால் அடித்துக்கொன்ற அவளுடைய இனத்தாருக்கும் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம். நன்றாக வளர்த்த ஆடு மாடு கள் திடீர் திடீரெனச் செத்து விழுந்தன.

பின்னர் ஒருநாள் ஒரு குழந்தையின் கனவில் வந்து தொப்பம்மாள் பேசினாள், “உங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தையும் நான்தான் கொடுத்து வந்தேன். இனி நீங்கள் என்னைச் சாமியாகக் கும்பிட்டால் உங்கள் கஷ்டங்கள் நீங்கும்” என்று சொன்னாள். ஊர் மக்கள் எல்லோரும் அவளைக் கொன்றுபோட்ட மலையடிவாரத்துக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவள்மீது எறிந்த கல்லெல்லாம் அப்படியே கிடந்தன. ஒரு சின்னச் சிலையும் அங்கே கிடந்தது. அந்தச் சிலையை எடுத்து வந்து கோயில்கட்டி வழிபடத் தொடங்கினார்கள். ஆண்டுதோறும் மாசி மாதம் தொப்பம்மாளின் கணவர் குடும்பத்தினரும் அக்குலத்தின் வழி வந்தவர்களும் ஒருநாள் திருவிழாவாகக் கொண்டாடி வழிபட்டுவருகின்றனர்.

(கதையைச் சொன்னவர் : ஏ.வெங்கட்டம்மாள்,

பூமலைக்குண்டு. சேகரித்தவர்: செல்வி )

இந்தக் கதையில் எதெல்லாம் நடந்தது, எதெல்லாம் மக்களின் புனைவு என்பதைப் பிரித்தறிய நம்மால் முடியும். அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன்.

இவ்விடத்தில் பைபிள் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. வேதபாரகரும் பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபச்சாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதிய வர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள்.

பாவத்தின் கறைகள்

அன்றைய புரட்சியாளர் இயேசு வின் குரலைச் சமூகம் தொடர்ந்து செவிமடுக்கவில்லை. பாலுறவு தனிப்பட்ட விஷயம் என்பது மறுக்கப்பட்டு அதன் தன்மையைத் தீர்மானிக்கும் உரிமையைச் சமூகம் தன் கையில் எடுத்துக்கொண்டது.

கல்லால் எறிந்து கொன்றால்தான் கொலையா? சொல்லால் அடித்தே பெண்களைக் கொல்லும் கதை தான் காலம் காலமாக இந்தப் பூமியில் நடந்துகொண்டே இருக்கி றதே? தொப்பம்மாள் தவறே செய்ய வில்லை. ஆனாலும், வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டாள். முறை தவறிய பாலுறவு குற்றம் என்பதில் ஊர் மக்களுக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்ததால்தான் கல்லை எறிந்தார்கள். பைபிளிலும் அதேதான். அப்படியானவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லலாம் என்பது மோசேயின் சட்டமாகவும் இருந்துள்ளது. எது முறை எது முறையற்றது என்பதை அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்கச் சிந்தனைகளும் தீர்மானித்தன.

கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணித்தால், முழுமையான பாலுறவு சுதந்திரத்தோடு ஆதிப் பெண்கள் நடமாடும் காட்சியை நாம் காண்கிறோம். சொத்துடமைச் சமூகமாக மனிதகுலம் மாறிய பின்தான் காட்சி மாறுகிறது. பெண்ணுக்கு மட்டும் கற்பு என்னும் கழுத்துச் சங்கிலி பூட்டப்படுகிறது. ஆணுக்கு அது கட்டாயமில்லை. பெண் அதை எதிர்த்துத் திமிறி இருக்கிறாள். தான் கொண்டிருந்த சுதந்திரத்தை இழக்கத் தயாராக இல்லாமல் போராடியிருக்கிறாள். அப்படி எதிர்த்தவளையெல்லாம் ‘கல்லால் அடித்துக் கொல்க’ என்று ஆணையிடப்பட்டது. காலந்தோறும் சட்டங்களின் பெயர்கள் மட்டும் மாறின. கல்லடி தொடர்ந்தது. பின்னர் கல் தேவையில்லை, சொல்லே போதுமெனச் சொல்லால் அடித்துச் செதுக்கிச் செதுக்கித்தான் பெண்ணின் பாலியல் வாழ்வு கடிவாளத்தில் பூட்டப்பட்டதோ? காதலையும் காமத்தையும் அறிவார்ந்த சமூகத்தில் பிறந்த தனிநபர்களின் விருப்பம் சார்ந்ததாக மாற்ற வேண்டும்.அப்படி இல்லாததால்தான் ஆணவக் கொலைகளைக் காதலருக்குப் பரிசளிக்கும் நாடாக நாம் தலைகுனிந்து நிற்கிறோம்.வரலாறு நெடுகிலும் நாம் கல்லெறிந்து கொன்ற எத்தனை கோடித் தாய்மாருக்குச் சிலை வைக்க வேண்டுமோ? எத்தனை சிலை வைத்தாலும் கொன்ற பாவத்தின் கறைகள்தாம் முற்றாக அழியுமோ?

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்