ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள், வன்கொடுமைகளைத் தேடி அலையும் கேமரா கண்களுக்கு மத்தியில், தம் மக்களின் அன்றாடத் தருணங்களை அழகுணர்ச்சியுடன் பதிந்து வருகிறது ஜெய்சிங் நாகேஸ்வரனுடைய கேமரா. மதுரை அருகேயுள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்த இவர், ‘ஐ ஃபீல் லைக் ஏ ஃபிஷ்’ (I feel like a fish) என்கிற தலைப்பிலான ஒளிப்படங்கள் மூலம், அக்கலையில் உலக அரங்கில் தடம் பதித்திருக்கிறார்.
நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த மேக்னம் அறக்கட்டளை ‘சமூகநீதி ஒளிப்பட ஊக்கத்தொகை’ போட்டியை அண்மையில் நடத்தியது. இதில் உலக அளவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 11 ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவர் ஜெய்சிங் நாகேஸ்வரன். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
நாற்காலியில் உட்காரவைத்த ஒளிப்படம்!
“வாடிப்பட்டியைச் சேர்ந்த நான், மதுரை இறையியல் கல்லூரியில் முதுகலை இதழியல் படித்தேன். அப்போது குஜராத்தில் நர்மதா அணைக்கட்டுத் திட்டத்துக்காக, பழங்குடிமக்கள் தங்களுடைய வாழிடத்திலிருந்து வலிந்து இடம்பெயர்க்கப்பட்டார்கள். அவர்கள் கிளர்ந்தெழுந்து, சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரின் கரம் பிடித்துப் போராடினார்கள். அந்த மண்ணின் மைந்தர்களை நேரில் சென்று ஒளிப்படம் எடுத்தேன். கல்லூரிக்கு திரும்பியபோது நான் பிடித்த படங்களை கண்ட எழுத்தாளர் வே.அலெக்ஸ், ‘ நீங்கள் ஓர் ஒளிப்படக் கலைஞராவதற்கு உங்களுடைய படங்கள் கட்டியம் கூறுகின்றன’ என்று உற்சாகப்படுத்தினார். அந்த ஊக்கம் என் பயணத்தை தொடங்கி வைத்தது என உற்சாகமாக அறிமுகம் பகிர்ந்தார் ஜெய்சிங்.
அதுவரை மதுரையில் வசித்து வந்த ஜெய்சிங்கை, சமத்துவம் நிறைந்த சென்னையின் வாழ்வும் ஒளிப்பதிவாளர் செழியனின் அழைப்பும் தலைநகரை நோக்கி நகர்த்தியிருக்கின்றன. ‘சென்னை வந்த புதிதில் ‘பிளாக்’ இந்திப் படத்தின் ஒளிப்பதிவை திரையரங்கில் கண்டு பிரமித்தேன். தாமதிக்காமல் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரனின் வீட்டுக்குச் சென்றேன். வழக்கமான சினிமாக்காரனாகவோ, விஸ்காம் மாணவனாகவோ இருப்பேன் என்கிற எண்ணத்திலேயே என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர், நான் எடுத்த நர்மதா போராட்டப் படங்களை பார்த்ததும் உட்காரச் சொன்னார். அடுத்தகணம், ‘வா என்னோடு மும்பைக்கு’ என்று அழைத்துச் சென்றார்” என்கிறார். அதன்பிறகு 'சாவரியா’, இந்தி ‘கஜினி’, 'ஃபிராக்’ ஆகிய இந்திப் படங்களில் ரவி.கே.சந்திரனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் ஜெய்சிங். விஷால் பரத்வாஜின் ‘ஹைதர்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டில் ஃபோட்டோகிராஃபியும் செய்திருக்கிறார். சினிமாவில் ஒளிப்பதிவுத்துறையில் பணியாற்றிய போதும் ஜெய்சிங்கின் மனம் ஒளிப்படக் கலையையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது. அந்த தாகம் தான் ‘ஐ ஃபீல் லைக் ஏ ஃபிஷ்’ ஒளிப்பட ஆல்பத்தை கரோனா ஊரடங்கு காலத்தில் படைக்கவும், அதற்கு சர்வதேசப் பரிசு வரையிலும் கிடைக்கும் தகுதிக்கும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.
என்னை நோக்கி கேமராவைத் திருப்பினேன்!
திரையுலகில் கிடைத்த தொடர்புகள் வழியாக, பல நாடுகளுக்கும் பரபரப்பான தொழில்முறை ஒளிப்படக் கலைஞராக வலம் வந்துகொண்டிருந்தவரை, கரோனா கால ஊடரங்கு, தன் சிறகுகள் முளைத்த சொந்த ஊருக்கு அழைத்து வந்தது. “ 15ஆண்டுகள் குடும்பத்தையும் ஊரையும் விட்டு விலகி இருந்த எனக்கு, கரோனா காலகட்டம் பெரும் படிப்பினையாக மாறியது. அதுவரை உலகை நோக்கி ஓடிக் கொண்டிருந்த என்னுடைய ஒளிப்படக் கருவியை முதல் முறையாக என்னை நோக்கித் திருப்பினேன். அதில் என்னவர்களின் வாழ்வுலகம் மட்டுமல்லாது, என்னுடைய கடந்த கால வரலாறும் விரியத் தொடங்கியது. 1953-ல் வாடிப்பட்டியில் என் பாட்டி பொன்னுத்தாயம்மாள் தொடங்கியது காந்திஜி தொடக்கப் பள்ளி. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக ஊர் மக்கள் மத்தியில், ‘பொன்னுத்தாயம்மாள் பள்ளி’யாக அது நிலைபெற்றிருக்கிறது. என் பாட்டி கடந்து வந்த பாதைதான் குரலற்றவர்களின் குரலாக காட்சி வடிவில் ஒலிக்க என்னை வழிநடத்தியது. ஆனாலும் இதுநாள்வரை என் பாட்டியின் வரலாற்றை என் கேமரா பதியத் தவறியது ஏன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். மறுபுறம், மும்பை வாழ்க்கை மாயை என்பதையும் எளிய வாழ்க்கைச் சூழல் பெரிதும் மாறிடாத என் வீடும் வீட்டினரும்தான் நிதர்சனம் என்பதை உணர்ந்த நொடியில் மனம் துலக்கமானது. என் வீடும் அதன் சுவரும் இப்படித்தான் இருக்கும், வீட்டு வாசலில் அம்மா விறகு அடுப்பில் இப்படித்தான் சோறு வடிப்பார், என் தங்கை மகள் இப்படித்தான் விளையாடுவாள் என என் இயல்பான வாழ்க்கையைப் படம் பிடிப்பதன் வழியே என்னுடைய மனத்தடைகளைத் தகர்த்தெறிய முற்பட்டேன். அதுவே சர்வதேச அங்கிகாரத்தையும் எனக்கு ஈட்டித் தந்திருக்கிறது” என்று விடைகொடுத்தார் ஜெய்சிங். கலைஞனையும் அவனுடைய படைப்பையும் உண்மையே எப்போதும் துலங்கச் செய்கிறது என்பதற்கு ஜெய்சிங் ஓர் எடுத்துக்காட்டு.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago