முகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு

By செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

மிகுந்த பாதுகாப்பு நிறைந்த தெற்கு மும்பையின் சார்மிகேல் சாலையில் நேற்று முன்தினம் ஸ்கார்பியோ கார் நிறுத்தப்பட்டிருந்தது. முகேஷ் அம்பானியின் அன்டிலா பங்களாவுக்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை போலீஸார் சோதித்தபோது அதனுள் ஜெலட்டின் குச்சிகள் சில இருந்தது தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடியோ காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். சட்டை தொப்பி (ஹூட்) அணிந்த மர்ம ஆசாமி அந்தக் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

அந்தக் காரினுள் சில நம்பர் பிளேட்டுகளும் இருந்ததாக, அவை அனைத்தும் முகேஷ் அம்பானி பயன்படுத்தும் காரின் எண்களைக் கொண்டதாக போலியாக தயாரிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் காரினுள் இருந்ததாகவும், அவை சுரங்கம் மற்றும் கிணறு வெட்ட பயன்படுத்தப்படும் குச்சிகள் என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் காரினுள் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் கடித விவரத்தை போரீசார் வெளியிடவில்லை.

இந்த கார் மும்பை நகரின் விக்ரோலி எனுமிடத்தில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சேஸில் எண்ணை அழிப்பதற்கு அதன் உரிமையாளர் முயன்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் எங்கிருந்து வந்தது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு பகுதிகளில் வீடியோ பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு போலீஸ் காவல் தரப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து 1.4 கி.மீ. தூரத்தில் இந்த மர்ம கார் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காருடன் வந்த இனோவா கார் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நகர் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், கைப்பற்றப்பட்ட கார் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், கடிதம் குறித்தும் விசாரிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்