ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கல்வி நிறுவனத்தை மூட அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு அளித்த உறுதியின்படி ரூ.1 கோடியே 24 லட்சம் வழங்கப்படாததால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக தமிழ் போதிக்கப்படுகிறது. ஜெர்மனியிலும் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம்1963-ல் தொடங்கப்பட்டது. தமிழால் ஈர்க்கப்பட்டு அதைப் பயின்று, தமிழ் அறிஞரான க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மானியர் இதனை நிறுவினார். தற்போது முனைவர் பட்டத்துக்கான 5 படிப்புகள் உட்பட தமிழில் இளங்கலை படிப்புகளிலும் இங்கு மாணவர்கள் பயில்கின்றனர். இடையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த ஆய்வு நிறுவனம், தெற்காசிய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகள் பண்பாட்டியல், மொழிகள் துறையுடன் இணைக்கப்பட்டது. தமிழகத்துக்கு வெளியே உள்ள இரண்டு பெரிய நூலகங்களில் சிகாக்கோவுடன், கொலோனும் ஒன்றாக உள்ளது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகளும் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, 2014-ல் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த முடிவின்படி, தமிழ் பிரிவின் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020-ல் ஓய்வு பெற்றபின் தமிழ்ப் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவின் தமிழ் இருக்கைகளில் பணியாற்றிய தமிழ் பேராசிரியர்கள் தலையிட்டு தடுக்க முயன்றனர். அமெரிக்கவாழ் இந்தியர்களான அவர்கள் 2018-ல் திரட்டி பல்கலைக்கழகத்துக்கு அளித்த நிதியால், மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்தி வைக்கப்பட்டது. பேராசிரியர் உல்ரிக்கின் ஓய்வுக்கு பிறகும் பாதி வேலைநேரத்துடன் தற்காலிகமாக அவரது பணியை நீட்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவருடன் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வெட்டர் மான் எனும் ஜெர்மானியர் நிரந்தரப் பணியில் தொடர்ந்தார்.
இதன் மற்றொரு பாதித் தொகையான ரூ.1 கோடியே 24 லட்சத்தை தமிழக அரசு அளிப்பதாக 2019-ல் கூறியது. இதை அங்கிருந்து கொலோன் வந்த தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும் உறுதி செய்துள்ளனர். கரோனா பரவலால் உருவான நிதிப் பற்றாக்குறையால் அந்தத் தொகை அளிக்க முடியாமல் தள்ளிப் போவதாகக் கருதப்படுகிறது. எனவே, வரும் மார்ச் 31-ம் தேதியுடன் உதவிப் பேராசிரியர் வெட்டர் மானை பணிநீக்கம் செய்து தமிழ்ப் பிரிவை மூட கொலோன் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதை மூடுவதிலிருந்து காக்க ஜெர்மனியின் 8 நகரத் தமிழர்கள், ‘ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பை தொடங்கி 12 நாட்டினருடன் இணைந்துள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஐரோப்பியக் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகியும் மூன்சென் நகரத் தமிழ் சங்கத்தின் தலைவருமான பி.செல்வகுமார் தொலைபேசியில் கூறும்போது, “குறைந்த அளவிலான இந்த நிதியுதவியை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தமிழக அரசால் வழங்க முடியுமா எனத் தெரியவில்லை. எனவே இதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளே அளித்து உதவலாம். ஏனெனில், தேர்தலில் ஒரு தொகுதிப் பிரச்சாரத்துக்கே பல கோடிகள் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகிறது. இதனால் அதில் ஒரு சிறுதொகையை அளித்து தமிழைக் காக்க வேண்டும் என அரசியல்வாதிகளிடம் கோருகிறோம்” என்றார்.
இதுபோன்ற ஒரு சிக்கல் கடந்த 2006-ம் ஆண்டிலும் ஒருமுறை உருவாகி ஜெர்மனியத் தமிழர்களால் காக்கப்பட்டுள்ளது. தற்போது, கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவை காக்க தேவைப்படும் 1,37,500 ஈரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 24 லட்சம்) ஐரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு சார்பில் திரட்டப்படுகிறது. இதுவரை 2000 ஈரோக்கள் மட்டும் சேர்ந்துள்ளன. ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் ஹெடில்பர்க் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்க் கல்வி மற்றும் ஆய்வுக்கானப் பிரிவுகள் செயல்படுகின்றன.. இதில் ஹெடில்பர்க் பல்கலைக்கழகத்திலும் கொலோனை போன்ற ஒரு சிக்கல் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago