தன்பாலின உறவு வழக்கு கடந்து வந்த பாதை

By செய்திப்பிரிவு

டெல்லியை சேர்ந்த மனநல மருத்துவர் கவிதா அரோராவும் (47), மருத்துவ பணியாளர் அங்கினா கன்னாவும் (36) கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் திருமண பதிவு அலுவலகத்தை அவர்கள் அணுகியபோது, சட்ட விதிகளின்படி தன்பாலின திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று பதில் அளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தங்களது திருமணத்தை பதிவு செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கவிதாவும் அங்கிதாவும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதேபோல வேறு சில தன்பாலின உறவாளர்களும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் ராஜீவ் சகாய் என்ட்லா, அமித் பன்சால் அமர்வு விசாரித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன்பாலின திருமணம் இந்திய குடும்ப நடைமுறைக்கு பொருந்தாது, தன்பாலின திருமணத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இப்போது நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாகி உள்ளது. தன்பாலின உறவு தொடர்பான சட்டம், வழக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது.

இதுதொடர்பான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377, கடந்த 1860-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்க முடியும்.

இதை எதிர்த்து கடந்த 2001-ம் ஆண்டில் நாஸ் என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2003-ம் ஆண்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து நாஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்தது. எனினும் தன்பாலின வழக்கு தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்து கடந்த 2009-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. 'இந்திய தண்டனை சட்டம் 377-ன் பிரிவு 14, 15, 21 ஆகியவை சட்டவிரோதமானது' என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, முகோபாத்யாயா அமர்வு விசாரித்து 2012-ம் ஆண்டில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு விசாரித்து 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. 'தன்பாலின உறவு குற்றமில்லை' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்